தற்போதைய செய்திகள்

வி‌ஷ ஊசி செலுத்தி சரத்பிரபு கொலை தந்தை கண்ணீர் பேட்டி…

கோவை, ஜன.20-

சரத்பிரபுவின் கழுத்தில் சிவப்பு வடு, தோள் பட்டையில் ரத்தக்கட்டு இருந்தது. என் மகனின் கழுத்தில் விஷ ஊசி செலுத்தியதற்கான தடயங்கள் இருந்தன என்று அவரது தந்தை கூறினார்.

மாணவர்

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபுவின் உடல் நேற்று முன்தினம் இரவு கோவை கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான திருப்பூர் பாரப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது நேற்று காலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

அப்போது, உறவினர், நண்பர்கள், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

உடலில் காயம்

இந்தநிலையில் சரத்பிரபுவின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை செல்வமணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
சரத்பிரபுவின் கழுத்தில் சிவப்பு வடு, தோள் பட்டையில் ரத்தக்கட்டு இருந்தது. தலை, கை உள்ளிட்ட இடங்களிலும் காயங்கள் இருந்தது. யாரோ மர்மநபர்கள் என் மகனின் கழுத்தில் பொட்டாசியம் குளோரைடை செலுத்தியதற்கான தடயங்கள் இருந்தன. இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

சந்தேகம்

என் மகனின் மரணம் குறித்து போலீசாரின் விசாரணைக்கு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர், அவருடன் படிக்கும் சக மாணவர்கள் என யாருமே சரியாக ஒத்துழைக்கவில்லை. இது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை அதிகரித்து உள்ளது. போலீஸ் விசாரணையில் கல்லூரி பெயர் கெட்டு விடும் என கருதுகின்றனர். எனவே போலீஸ் விசாரணை முறையாக நடப்பதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரைணை நடந்து வருவதாகவும், நேர்மையாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் உறுதி அளித்துள்ளனர்.
என் மகனை டெல்லிக்கு படிக்க அனுப்பியது தான் நான் செய்த பெரிய தவறு. நான் எந்த இழப்புகளையும் சமாளித்து விடுவேன். ஆனால் என்னால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்

சரத்பிரபு உடலுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம் பேசிய செல்வமணி தனது செல்போனில் சரத்பிரபு இறந்த பின்பான சில புகைப்படங்களை காண்பித்தார். அவற்றில் சரத் பிரபுவின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களை இருந்ததை காட்டி கண்ணீர் விட்டு அழுதார்.
Leave a Reply