தற்போதைய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைகிறது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்களும் ஆதரவு….

சென்னை, மார்ச் 31.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வீடு,அலுவலகங்களில் கருப்புகொடி ஏற்றி உள்ளனர்.
காவிரி பிரச்சினை
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. அந்த 6 வார காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள்
இந்தநிலையில் காவிரி பிரச்சினையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் அருகே உள்ள கூடூரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து காவிரி உரிமையை மீட்க வேண்டும் என தெரிவித்தனர்.
தற்கொலை மிரட்டல்
சிவகங்கை நகரில் நேற்று காலை பாலா என்பவரின் தலைமையில் வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 8 பேர் நகரின் தெப்பக்குளம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதே கட்சியைச் சேர்ந்த மற்ற 8 பேர் பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 16 மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நேற்று தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் ரகுபதி தலைமையில் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரபாகரன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி புதுக்கோட்டை நிஜாம் காலனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பியபடி திடீரென அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை டவரில் இருந்து கீழே இறங்கி வர செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு

ஈரோடு மாநகரில் வில்லரசம்பட்டி பனங்காடு, பெரியசேமூர், அக்ரஹாரம், வண்டியூரான் கோவில், வளையக்கார வீதி,தண்ணீர்பந்தல் பாளையம், வெண்டிபாளையம், மூலப்பாளையம், ஆர்.என்.புதூர், சூரம்பட்டி அணைக்கட்டு பகுதி, கலைஞர் நகர், முத்துசாமி காலனி, அம்மன்நகர் உள்பட பகுதியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே போல் சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, விஜய மங்கலம், கவுந்தப்பாடி, சிவகிரி, கொடுமுடி, அரச்சலூர், மொடக்குறிச்சி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களில் கருப்பு கொடியேற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
Leave a Reply