தற்போதைய செய்திகள்

விவசாயிகள் பயன்பெறும் வகையில்-வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சி அருங்காட்சியகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்……

கோவை

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பூச்சி அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

பூச்சி வகைகள்

இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே எவ்வளவு பூச்சி வகைகள் இருக்கின்ற என்பதை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் தெளிவாக பார்த்தோம். சுமார் 75,000 பூச்சி வகைகள் இருப்பதாக இந்த அருங்காட்சியகத்திலே குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த 75,000 பூச்சி வகைகளில் உலகளவில் பார்க்கும்போது 6 சதவிகிதம் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த 75,000 பூச்சி வகைகளை இங்கு பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த பூச்சியால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறது, எந்த பூச்சியால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், எந்த பூச்சியினால் தீமை கிடைக்கிறது என்பதை அருங்காட்சியகத்திற்கு உள்ளே வருகின்ற போதே நாம் தெரிந்து கொள்ளலாம்.

பாராட்டு

அந்த அளவிற்கு தத்ரூபமாக, இந்த அருங்காட்சியகத்தை அமைத்த அமைச்சர், முதன்மை செயலாளர், துணை வேந்தர் ஆகியோர் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், இந்த வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் அனைவருக்கும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

பேசுவது எளிது, ஆனால் அதை செய்து காட்டுவது கடினம், ஆனால் கடினமான அந்த வேலையை தத்ரூபமாக அத்தனை பூச்சி வகைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து, அதை பார்ப்பதற்கு அழகாக இருக்கின்ற வகையிலே அதை நேர்த்தியாக, இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது உண்மையிலே பாராட்டுக்குரியது.

கல்வி அறிவு ெபருகும்

உலகளவில் 20 இடங்களில் மட்டுமே இத்தகைய அருங்காட்சியம் இருப்பதாக சொன்னார்கள். ஆனால், இந்த அளவிற்கு இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியா மட்டுமல்ல, உலகளவிலேயே தத்ரூபமாக அந்த பூச்சி வகைப்பாடுகளை, என்னென்ன விதத்திலே தீமை செய்கிறது, எப்படி அது உருவாகி, பெரிதாகி, அதன்மூலமாக எப்படி தீமை செய்கிறது, என்பதை எல்லாம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதேபோல, அந்த பூச்சி வகைகளால் எப்படி எல்லாம் நன்மை கிடைக்கிறது என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பூச்சி கடித்தால் நம்முடைய உடலில் என்ன நோய் ஏற்படும் என்பதையும் இந்த அருங்காட்சியகத்திலே தெளிவாக காட்டியிருக்கிறார்கள். இதை எல்லாம் நம்முடைய மாணவர்கள் மட்டுமின்றி, வெளியிலே படிக்கின்ற மாணவர்களும் இதைப் பார்க்கின்ற போது, அவர்களது கல்வி அறிவு பெருகும்.

விவசாயிகள் பயன்

விஞ்ஞான வளர்ச்சி இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. புதுப்புது வகையான பூச்சிகள், அந்த பூச்சிகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் நன்மைகளை அறிந்து, இந்த அருங்காட்சியகத்தின் மூலமாக பயன்பெற முடியும். இன்றைக்கு விவசாயிகள் எவ்வளவு தான் பாடுபட்டு பயிரை வளர்த்தாலும், ஒரு சில பூச்சிகளால் தீமை உண்டாகி அந்த பயிர் நாசமாகிறது. தண்டுப்பூச்சி நான் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன், நன்றாக தெரியும். பயிர் வளரும்போது இடையிலே தண்டிலே புழு ஏறி அதை துண்டித்துவிடும். முற்றிய நிலையில் பயிர் பாதிப்படைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்.

அதேபோல, பருத்திகளில் விழுதுகள் வழியாக, தண்டு வழியாக அந்த பூச்சி போய் அந்த தண்டில் இருக்கின்ற ஊண் எல்லாம் உறிஞ்சி, அதனால் தண்டு உடைந்து விழுந்து விடும். அதையெல்லாம் இங்கே தத்ரூபமாக வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து விவசாயிகள், வேளாண் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொண்டு, எந்த மருந்துகளை அடித்தால் அந்த பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை எல்லாம் இங்கே தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

5 கோடி மதிப்பீடு

இந்த அருங்காட்சியகம் மக்களுக்கு பயனுள்ள அருங்காட்சியகம். இதனால், வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த அருங்காட்சியகத்தின் மூலமாக தங்கள் அறிவை பெருக்கிக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சி அருங்காட்சியகம் 5 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பூச்சிக்கென்றே அமைக்கப்பட்ட தனித்துவமான அருங்காட்சியகம் நம்முடைய கோவை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.

அனைவரும் பார்க்க வேண்டும்

ஆசிய கண்டத்திலே, மேற்கு சீனாவிலே ஒரு மிகப்பெரிய பூச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகம் 6691 சதுர பரப்பில் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பூச்சிக்கென அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இங்கே ஆய்வுக்கூடங்களை பொறுத்தவரையில் 12 கோடி ரூபாய் நிதியில் நிறுவப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் செலவில் நுண்ணுயிர் சிறப்பு ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு கூட இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை அனைவரும் பார்ப்பது அவசியம். அதிலே, விவசாயிகள் அதிகமாக கலந்து கொண்டு பார்த்தால், உண்மையிலேயே விவசாய பெருமக்கள் அவர்கள் பயிரிடுகின்ற போது அவர்களது பயிர்களை தாக்குகின்ற பூச்சிகளை தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு அந்த பயிரை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Leave a Reply