தற்போதைய செய்திகள்
10704CNI_APRIL_ 07 _ B

விவசாயிகளின் நலனுக்காக -‘உழவன் கைபேசி செயலி’, ‘அம்மா உயிர் உரங்கள்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்……

சென்னை,
விவசாயிகளின் நலனுக்காக ‘உழவன் கைபேசி செயலி, அம்மா உயிர் உரங்கள் ஆகிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வாடகை இயந்திரங்கள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு விவசாயிகள் ஒரு மீட்டருக்கு ரூ.130 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் சுழல் விசைத்துளைக் கருவிகளை பயன்படுத்தி குழாய் கிணறுகள் அமைத்து பாசன வசதியை உருவாக்கிட, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக 8 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட சுழல் விசைத்துளைக் கருவிகள் பொருத்தப்பட்ட 10 வாகனங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மேலும், நிலமேம்பாடு மற்றும் சிறுபாசனத் திட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக, மணிக்கு ரூ. 340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்காக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உதவியுடன், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 50 டிராக்டர்கள் மற்றும் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டர்களுக்கு ஏற்ற பண்ணைக் கருவிகளான – 150 ரோட்டவேட்டர்கள், 150 ஐந்து கொத்துக் கலப்பைகள், 50 சட்டிக் கலப்பைகள் மற்றும் 10 வரப்பு அமைக்கும் கருவிகள்; என மொத்தம் 14 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வாகனங்களுக்கான சாவிகளை 5 ஓட்டுநர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

உழவன் கைபேசி செயலி

வேளாண்மைத் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக “உழவன்” என்ற கைபேசி செயலியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள இந்த “உழவன்” கைபேசி செயலி மூலம் விவசாயிகள், வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களின் மானிய விவரங்கள், டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல் வலைக் குடில், பசுமைக் குடில் போன்ற உயர் மதிப்புள்ள உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெறுவதற்கு முன்பதிவு செய்தல், அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து
விவசாயிகளும், தாங்கள் பயிர் காப்பீடு செய்த விவரங்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

மேலும், தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் விதை மற்றும் உர இருப்பு விவரங்கள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி, விளைப் பொருட்களின் சந்தை விலை விவரங்கள், விவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரங்களை அறியும் வசதி மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் போன்ற ஒன்பது வகையான சேவைகளை பெற்று பயன்பெறலாம். “உழவன்” கைபேசி செயலியினை கூகுள் மூலமாக விவசாயிகள் தங்களின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அம்மா உயிர் உரங்கள்

சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, மண் வளத்தினை பேணிப் பாதுகாத்து, மகசூல் பெருக்கும் மலிவு விலை உயிர் உரங்களுக்கு, இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையில், “அம்மா உயிர் உரங்கள்” எனப் பெயரிடப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘அம்மா உயிர் உரங்கள்’’ விநியோகத்தினை 5 விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து செல்ல வசதியாக நாகர்கோவில் – கன்னியாகுமரி அகத்தீஸ்வரத்தில் உள்ள அரசு தோட்டக் கலைப் பண்ணையில் 15 ஏக்கர் நிலப் பரப்பளவில், 4 கோடி ரூபாய் செலவில், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களுடனும், சிறந்த கலைநயமிக்க வடிவமைப்புடனும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply