தற்போதைய செய்திகள்

விலகி சென்றவர்கள் மீண்டும் வந்தால் நாங்கள் காப்போம் தினகரன் ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு….

மதுரை,

விலகி சென்றவர்கள் மீண்டும் வந்தால் நாங்கள் காப்போம் என்று தினகரன் ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாள்

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் முத்தாய்ப்பாக 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

120 ஜோடிகளுக்கு…

அம்மா பேரவை சார்பில் 120 ஏழை ஜோடிகளுக்கு இங்கே திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இது. இந்த விழாவில் பங்கேற்பது சிறப்பானது. இது திருமண விழாவா? அல்லது சித்திரை பெருவிழாவா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு மதுரை மக்கள் இங்கு விழாக்கோலம் பூண்டுள்ளனர்.

அம்மா பேரவை சார்பில் சித்திரை விழா போல சிறப்பாக இந்த விழாவை நடத்தியுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
இருமணம் இணைவது திருமணம் என்பார்கள். இங்கே கூடுதலாக ஒரு மணம் இருக்கிறது. அது நம் அம்மாவின் அன்பு மனம். பாச மனம், கருணை மனம். இந்த கருணை மனம் தான் இந்த திருமண விழாவிற்கு ஆதாரமாக திகழ்கிறது.

அம்மா வழியில்…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் சொர்க்கத்தில் இருந்து அம்மா நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். அம்மாவின் பிறந்த நாளை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட அம்மா ஏற்கனவே ஆலோசனை வழங்கி உள்ளார். அவருக்கு நன்றிக்கடனாக இது போன்ற திருமண விழாவை நடத்தி வருகிறோம்.

சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். ஆடம்பரமாக விழா கொண்டாடுகிறார்கள். அதை நாம் பார்க்கிறோம். ஆனால் பிறர் மனம் மகிழும் வகையில் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். அதைத்தான் அ.தி.மு.க. இயக்கம் செய்து வருகிறது. பெண் இனத்திற்காக வாழ்ந்து தன் உயிரையே உருக்கிக் கொண்டவர் அம்மா. அள்ளித்தரும் வானமாக திகழ்ந்தவர். அம்மாவின் விசுவாசத் தொண்டர்களும், ஏழை, எளிய மக்களுக்காக அம்மாவின் வழியில் செயலாற்றி வருகிறோம்.

பறந்து வாருங்கள்…

ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது புண்ணியம் என்பார்கள். அப்படிப்பட்ட புண்ணியத்தை தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் நிறைய செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த புண்ணியம் டெபாசிட்டாக இருந்து வட்டியாக தொண்டர்களாகிய நமக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க சிலர் நினைத்தார்கள். கவிழ்த்தால் மக்கள் மகிழ்ச்சி குலையும். அந்த வஞ்சக வலையை வீச வேடன் போல சுற்றி வருகிறார்கள். அந்த வேடர்களின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளக்கூடாது.

ஒரு காட்டில் வேடன் புறாக்களை பிடிப்பதற்காக வலை விரித்து அதில் தானியங்களை போட்டு வைத்தான். அனுபவமான புறாக்கள் அந்தப்பக்கம் செல்லவில்லை. சில புறாக்கள் உணவுக்கு ஆசைப்பட்டு வேடன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டனர். அப்போது அனுபவமிக்க புறாக்கள், வலையில் சிக்கிய புறாக்களை பார்த்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இப்போதும் வழி இருக்கிறது என்று கூறியதுடன், வேடன் உங்களை எடுத்துச் சென்று என்ன செய்யப்போகிறான்? என்பதையும் கூறின.

வலையில் சிக்கிக் கொண்ட புறாக்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வலையோடு பறந்து போங்கள். உங்களை காப்பாற்ற இது தான் வழி என்று அனுபவ புறாக்கள் கூறின. தமிழக அரசியலிலும் இது போன்ற சூழல் நிலவி வருகிறது. வேடன் வலையில் சிக்கிய புறாக்களுக்கு அனுபவசாலி புறாக்கள் கூறியது போல நாங்களும் அழைக்கிறோம். நீங்கள் அனைவரும் பறந்து வாருங்கள். நாங்கள் காக்கிறோம். தமிழக மக்களுக்கு ஒன்றிணைந்து மகிழ்ச்சியை கொடுப்போம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மாவின் வழியில் லட்சிய பாதையை விட்டு விலகாது மக்கள் பணியாற்றுவோம்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்
Leave a Reply