BREAKING NEWS

`விரைவில் காலம் பதில் சொல்லும்’ தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர் – மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி.

 

 

கருணாநிதி மறைவு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, கடந்த 7-ந் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்கு தி.மு.க. தொண்டர்கள் தினந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்னாள் எம்.பி.யும், கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி நேற்று தனது மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறியதாவது:-

விசுவாசிகள் என் பக்கம்

என் அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. என்னுடைய தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

ஆதங்கம்

கேள்வி : உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா? குடும்பம் தொடர்பானதா?

பதில் : கட்சி தொடர்பானதுதான்.

மீண்டும் தி.மு.க.வில்?

கேள்வி: தலைமைச் செயற்குழு நடைபெறுகிறது, அது பற்றி உங்கள் கருத்து?

பதில் : நான் இப்போது தி.மு.க.வில் இல்லை. தி.மு.க. செயற்குழு பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.

கேள்வி : மீண்டும் தி.மு.க.வில் இணைய வாய்ப்புள்ளதா?

பதில் : அதுபற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய ஆதங்கத்தைத் தலைவரிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

அழகிரியின் செயல்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரை கருணாநிதி கட்சியில் இருந்து நீக்குவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அதன்பின்பு, அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும், அவ்வப்போது உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.

மேலும், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவரது இறுதி அஞ்சலி நடைபெற்றபோதும் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் ஒன்றாகவே இருந்தனர். ஆனால், இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி மறைந்துள்ள நிலையில், மு.க.அழகிரி இவ்வாறு பேட்டி அளித்திருப்பது தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புட்நோட்

கருணாநிதி சமாதியில் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.




Leave a Reply