BREAKING NEWS

விமர்சனம் – அசுரன்

மனைவி, 2 மகன்கள். ஒரு மகள் என ஒட்டு குடிசையில் குடியிருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்து விவசாயி சிவசாமி..
அவர் விவசாயம் செய்து பிழைக்கும் சின்னஞ்சிறு நிலத்தின் மீது ஆதிக்க வர்த்தகத்துக்கு ஒரு கண். கேட்டுப்பார்க்கிறார்கள். சிவசாமி மறுக்கவே அவரை அவமானப்படுத்தி பிடுங்க முயல்கிறார்கள். சிவசாமியின் மூத்த மகன் கொதித்து எழ – அவனை அப்படியே வெட்டி சாய்த்து எரித்து கொள்கிறது ஆதிக்க சாதி.
இது தெரிந்தும் தன் குடும்பத்துக்காக அமைதியாக இருக்கிறார், சிவசாமி, ‘‘அண்ணனை கொன்னுட்டாங்க.. தட்டி கேட்காத நீயெல்லாம் ஒரு அப்பனா?‘‘ என இளையமகன் காரமாக கேட்டதோடு தன் அண்ணனை வெட்டி கொன்றவனை குத்தி சாய்க்கிறான். விடுமா ஆதிக்க சாதி? பழிக்கு பழி வாங்க அவனையும் அவன் குடும்பத்தையும் தேடோ தேடு என தேட, அந்த கயவர்களிடம் இருந்து மகனையும், குடும்பத்தையும் சிவசாமி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லும் படம் இது.
அங்கங்கே வெள்ளை முடி சிலுப்பி நிற்கும் கரடு முரடான மீசை. முக்கால் கை நீள அழுக்கான சட்டை. வெள்ளை நிறம் காணாத வேட்டி. தளர்ந்த நடை. தடுமாறாத பேச்சு என 48 வயதான சிவசாமி கேரக்டரில் தனுஷ் வாழ்ந்திருக்கிறார்.
‘நம் அப்பன் ஒரு சொத்தை‘‘ என நினைத்து கொண்டு இருக்கும் மகன் முன்பு அவனை காப்பாற்ற மணல் மேட்டில் எதிரிகளிடம் மோதும் மோதல் இருக்கிறதே – அங்கே தனுஷ் காட்டெறுமையின் உக்ரம்.
ஒரு சிவசாமி போதாது என்று அவருக்குள் இன்னொரு கதை கொடுத்து அதில் இளம் வயது தனுஷை விளையாட விட்டு இருக்கிறார்கள்.
அத்தை மகளுக்கு ஆசையாய் வாங்கி கொடுத்த செருப்பே ‘வில்லங்கமாக‘ உருவாகி அவளை எரித்து விட- பழிக்கு பழியாய் ஆதிக்க சாதிக்கு அவர் திருப்பி கொடுக்கும் அடி ஒவ்வொன்றும் ஆவேசத்தின் உச்சம். தந்தை – மகன் என இரு கேரக்டரிலும் தனுசின் நடிப்பு அருமையிலும் அருமை. தனுஷுக்கு விருது நிச்சயம்.
அவரது மனைவியாக மஞ்சு வாரியார். கிராமத்து பெண்ணாக பாசத்திலும், வீரத்திலும் உயர்ந்து நிற்கிறார். அவரது அண்ணனாக பசுபதி. மச்சான் இருந்தால் மலையேறலாம் என்பார்கள். இந்த மச்சான் அந்த ரகம்.
படத்தில் மறக்க முடியாத ஒரு கேரக்டர் தனுஷின் இளைய மகனாக வரும் கென். நடிகர் கருணாசின் மகன்.. 16 வயது சிறுவனுக்கு உரிய பயமரியாத குணத்தையும் , கோபத்தையும், கொப்பளித்து தனுசுக்கு சரி நிகராக நிற்கிறார் மூத்த மகனாக டி.ஜே. அருணாசலமும், வக்கீலாக பிரகாஷ் ராஜும்,போலீஸ் அதிகாரியாக பாலாஜி சக்திவேலும் மண்ணின் மணம் பரப்பும் கதாபாத்திரங்கள்.
ரத்தமும் சதையுமான இக்கதையில் .காட்டிலும் மேட்டிலும் வேல்ராஜின் காமிரா விளையாடி இருக்க, அதில் ‘திக் திக்‘ உணர்வை ஊட்டியிருக்கிறது, ஜி வி பிரகாஷின் பின்னணி இசை.
படத்தை இயக்கி இருப்பவர் வெற்றி மாறன். தனுசும் இவரும் சேர்ந்தால் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்தில் இருவரும் சேர்ந்து எகிறி அடித்து இருக்கிறார்கள். படம் பார்த்த மாதிரி இல்லை. ஒரு குடும்பத்துக்குள் – ஒரு கிராமத்துக்குள் நாமே 2 ½ மணி நேரம் சென்று வந்த மாதிரி அப்படியொரு விறு விறுப்பு.

~அசுரன் வெறிதனமானவன்~
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *