BREAKING NEWS

விதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் மீது வழக்குப்பதிவு – 5வது நாளாக போலீசார் சோதனை.

சென்னையில் 5வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 469 பேர் சிக்கினர். மேலும் போக்குவரத்து விதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கமிஷனர் உத்தரவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் உத்தரவின்படி தொடர்ந்து 5வது நாளாக, போலீசார் சிறப்பு அதிரடி சோதனைகள் நடத்தினர்.

இந்த சோதனையில், அதிக எண்ணிக்கையிலான வாகன சோதனைகளும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் சோதனை

இந்த சோதனையில் பழைய குற்றவாளிகள், குற்ற பின்னணி உள்ள நபர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கைகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து காவல் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையர்கள் மேற்பார்வையில், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

469 பேர் கைது

இந்த சோதனையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 நபர்களும், தலைமறைவு குற்றவாளிகள் 4 பேரும், 109 மற்றும் 110 கு.வி.மு.ச. பிரிவின் கீழ் 35 நபர்களும் பிடிபட்டனர். இது தவிர சந்தேகப்படக் கூடிய குற்றப் பின்னணி நபர்கள் 53 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் போக்குவரத்து காவல் சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 234 நபர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 100 நபர்கள், தாறுமாறாக வாகனம் ஓட்டிய 66 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 809 நபர்கள் மற்றும் போக்குவரத்து விதிமிறல்களில் ஈடுபட்ட 469 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

——




Leave a Reply