BREAKING NEWS

விடியும் முன் எழுக..!

நம்மையும் பிற உயிரினங்களையும் நாம் வாழும் உலகத்தையும், அதிலுள்ள விசித்திரப் பொருட்களையும் காணும்போது, இவற்றை எல்லாம் படைத்த ஒருவன் இருக்கத்தான்  வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான்  வேண்டும். அப்படி படைத்தவனைத்தான் இறைவன், கடவுள், தெய்வம், கர்த்தர், அல்லா என்று பல பெயரிட்டு மானிட இனத்தின் முன்னோர்கள் காட்டினார்கள். இறைவன் எனப்படுபவர் மிக்க ஆற்றல் வாய்ந்தவர். அவரைக் காட்டிலும் உயர்ந்த பொருள் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர். எல்லாம் வல்லவர் என்று எல்லோரும் நம்பினர். அவரை மதித்துப் போற்றி தம் வாழ்வில் அவரைப் பிணைத்துக்கொண்டு வாழ்ந்து இவ்வுலகை விட்டுப்போனால் அவரைத்தான் அடைய வேண்டுமென்று கருதினர். அதற்காகச் சில சில வழி வகைகளை வகுத்துக் கொண்டு, அந்த நெறிகளில் வாழவும் முற்பட்டனர். அப்படி  வகுத்துக் கொண்ட வழிவகைகளைத்தான்  சமயம், மதம் என்ற பெயர்களில் குறித்தனர். அதனால் சில எல்லோருக்கும் பொதுவாயின. அவையாவன:-

(1) எல்லாவற்றுக்கும் உயர்ந்த ஒரு பொருள் இருக்கிறது அது எல்லா வல்லமையும் கொண்டது. எங்கும் நிறைந்திருப்பது என்ற நம்பிக்கை.

(2) இப்படிப்பட்ட பொருளை போற்றி வழிபட வேண்டுவது மனிதனின் கடமை.

(3) அந்த பொருளை வழிபட அன்பு நெறியும், அறவழியும் துணை செய்வனவாகும்.

(4) அறநெறியிலிருந்தும்,  அன்புடைமையில் இருந்தும் விலகுதல் ஆகாது, விலகினால் அது பாவச் செயல்.

(5) அப்படிப்பட்ட பாவச் செயல்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

இந்த 5 கொள்கைகளும் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானவை. இவ்வாறு  மனிதனுடைய உயிரும், உடலும், உடைமையும் எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனால் செலுத்தப்படுதல் வேண்டும். அதுவே, வாழும் வழியாகும் என்று வகுத்தனர். கடவுளை நினையாமல், நல்லொழுக்கங்களையும் நல்ல பண்புகளையும் கடைபிடித்து வாழ்ந்தாலே போதும். இதனால்தான் வள்ளுவர்கூட “தெய்வம் தொழாள்” என்று பெண்மையின் உயர்வினை போற்றினார். இவ்வாழ்வு சிறப்பதற்காக காலை எழுந்ததும் கணவன் கமல பாதத்தினை  வணங்கி தன் கடமைகளை தொடங்குகின்ற, ஒரு பெண்மணியை தெய்வமே தொழும், இவள் தெய்வத்தை தொழ வேண்ழய தேவை இல்லை என்று சுட்டிக் காட்டினார். அதுதான் ஆன்மிகத்தின் சிறப்பு.

சமயங்களில் ஒரு சில கொள்கைகளிலும், உணர்ச்சிகளிலும் வேறுபாடு இருப்பின், சில ஒழுக்கங்களை வற்புறுத்துவதில் ஒற்றுமை காணப்படுகிறது அவையாவன:-

தீங்கு பயவாத வகையில் உண்மை பேசுவது   நல்லனவற்றையே நினைப்பது  பேசுவது  செய்வது   உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது;   காமம் கோபம், அகந்தை போன்ற தீய குணங்களைக் களைவது   பொய்கள்,  களவு தவிர்ப்பது போன்றவை தவறாமல் கடைபடிக்கத் தக்கவை என எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்றுகொள்ள புறநானூற்று புலவரின் பரந்த மனத்தை எல்லோரும் பெற முடியும், இதனால் புவியில் போரும், மதத்தின் பெயரால்  அரசியல் பூசலும், வன்முறையும் தோன்றாது. மன அமைதிக்கு வழி காட்டும் நெறிதான் “மதம்” எனப்பட்டது. இதனை “தர்மம்” என்றும் கூறலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிறவிப் பயன் நான்கையும் பெறச் செய்வதே மதமாகும்.

நமது உடலை பேணுவதற்கு வகுக்கப்பட்ட வழி வகை. விடியும் முன் எழுக, அதிகாலை காலை 3.00 – 4.30 மணிக்குள் எழுக!  வானத்தை நோக்கி வெளியில் அமர்ந்து காற்றை சுவாசித்தல், காற்றின் சக்தி உடலை சுத்தப்படுத்தும். பின்பு குளிர் நீரில் குளியுங்கள், வெற்று மார்புடன் குளியல் செய்யுங்கள். இறைவனை வழிபடுங்கள். இவையனைத்தையும் இளங்காலை பொழுது மறையும் முன்பு செய்தால், அன்றைய தினம் மணமாக மாறும். அன்றைய நாளின் தொடக்கம் நேர்மறையாக (Positive energy) தொடங்கி அன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். நீங்கள் செய்கின்ற செயல் அத்தனையும் வெற்றியாக முடியும். இந்த  செயல் அத்தனைக்கும் விஞ்ஞான பூர்வமான சக்தி சேர்வதற்கான ஆதாரம் இன்றைய விஞ்ஞான உலகில், மேலை நாட்டிலே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அதனை மேலை நாட்டில் சொன்னால்தான் நாம் ஏற்றுக்கொள்ளும் வழக்கம் வைத்திருக்கின்றோம்.

அன்றைய காலத்தில் பள்ளியில் படிக்கின்ற மாணவன் பாடங்களை கற்காமலோ அல்லது வீட்டுப் பாடங்கள் சரியாக எழுதாமலோ பள்ளிக்கு வந்தால் அந்த வகுப்பு ஆசிரியர் தோப்புக் கரணம் போடு என்று தண்டனை கொடுப்பார். எதற்காக அது போல தண்டனை என்று யாராவது யோசித்து இருக்கிறோமா? இன்றைய 21ஆம் நூற்றாண்டிலே மிகப் பெரிய அமெரிக்க மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.

18 வயது வாலிபன் ஒருவனுக்கு பாரிசவாயு (Paralytic attack) நோய்வாய்பட்டான். அவனுக்கு கைகளும், கால்களும் வளைந்து காணப்பட்டன ஏன்? என்ன என்கின்ற மூல காரணத்தை அங்கிருந்த அமெரிக்க தலை சிறந்த மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வள்ளுவன் சொன்னது போல “நோய் நாடி, நோய் முதல் நாடி” என்ற தத்துவத்தை மறந்து வாழ்கின்ற மருத்துவர்கள் இன்றைய உலகின்  மேதைகளாக கருதப்பட்டு நோபல் பரிசு கூட வழங்கப்படுகின்றது. மருத்துவர்கள் வழி தெரியாமல் முழித்து கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தியப் பாரம்பர்யக் கலாசாரம் அறிந்த இந்திய மருத்துவர்கள் நோய்வாய்பட்டிருந்த மாணவனுக்கு ஆலோசனை வழங்கினார்கள். அந்த நோயாளி வலது கையினால் இடது காதையும் இடது கையினால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து பின் எழுந்து நிற்க வேண்டும். இது போல காலை மாலை செய்துவரச் சொல்லுங்கள், கடினமாகத் தோன்றினாலும் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்ய வேண்டும், “அதன்பின் நான் வந்து பார்க்கிறேன்” என இந்திய மருத்துவர் சொல்லிச் சென்றார். அந்தப் பயிற்சி ஆரம்பமானது.  40 நாட்கள் கழிந்தன 41வது நாள் நமது மருத்துவர் வந்து பரிசோதிக்கிறார். என்ன ஆச்சரியம்! 18 வயது வாலிபன் Paralytic attack-லிருந்து விலகி நடக்க ஆரம்பித்து விட்டான். அமெரிக்க மருத்துவர்களுக்கு வியப்பு. இதுதான் நம் பாரம்பர்ய வைத்திய முறையின் சிறப்பு இதனை ஆன்மிகத்தோடு இணைத்து போதிக்கப்பட்டு ஆன்மிகத்தின் சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. அன்று முதல் இந்தப் பயிற்சி முறை அமெரிக்காவில் உள்ள அந்த மருத்துவ மனையில் கடைபிடிக்கப்பட்டு பாரிச வாயு நோய் குணப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.

அரசியல்

பக்தவச்சலம் ஆட்சி நடைபெறுகின்ற போது இந்தி எதிர்ப்பு போராட்டம் விதை ஊன்றப்பட்டது. ஆனால், அந்தப் போரட்டத்தில் முன்னின்ற அனைவருமே “இந்தி எதிர்ப்புக்கு ஒத்துழைப்போம்” என்ற உறுதி கொண்டவராக முழுமையாக காணப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். இவர்களெல்லாம் ஒன்றை மறந்து விட்டார்கள் அரசியல் சாசன திட்டம் இயற்றப்பட்ட போது இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்கிற ஷரத்து உருவாக்கப்பட்டு, அரசியல் சாசன சட்டத்தின் முக்கியமான அங்கமாகப் பிறப்பிக்கப்பட்டது. என்னுடைய நினைவுக்கு எட்டியவரை, தமிழ் நாடு தவிர எந்த மாநிலமும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக வேண்டுமென்று முனையவில்லை. நாங்கள் முழுமையாக இந்தி கற்றுக்கொள்ளும் வரை இரு  மொழிக் கொள்கை அமலில் இருக்கும். அதாவது ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை இந்தி எதிர்ப்பாளர்கள் ஓரளவு ஒப்புக் கொண்டனர்.

பின்பு 1956-ல் மொழி வழி பிரிக்கின்ற – Reorganisation of States Acts  இயற்றப்பட்டு அந்தந்த மாநிலங்கள் ஓரளவு மொழியின் பெயரால் அழைக்கப்பட்டன. இந்நிலை 1967-ம் ஆண்டு வரையில் அதற்கு பின்னாலும் தொடர்ந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பாக இந்தி மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம், தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை என்ற போராட்டமும் அல்லது சட்டசபை தீர்மானங்களும் ஏற்பட்டதாக சரித்திரத்தில் செய்தி இல்லை. அது மட்டுமல்ல 1967-ல் இருந்து 2019 இன்று வரை அரசியல்  சாசன சட்ட தீர்ப்பை திருத்தி தமிழையும் தேசிய மொழியாக இந்திக்கு சமநிலை கொடுத்து நிறைபெற செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையோ அல்லது முயற்சியோ அல்லது நாடாளுமன்றத்தில் Private Bill கொண்டு வரப்படாத நிலையில் அரசியல் சாசன சட்டத்தை மதித்துத்தானே செயல்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ் நாட்டில் தமிழ் கட்சிகள் ஆட்சி நடந்தாலும் மத்தியில் ஆள்கின்ற  கட்சியோடு இணைந்து பதவி ஏற்று கூட்டாட்சி நடத்துகின்ற காலத்தில் கூட இப்படிப்பட்ட   தீர்மானம் அல்லது அரசியல்  சாசன திருத்தம் கொண்டு வர வேண்டும்  என்று எந்த ஒரு சிந்தனையும், எந்த ஒரு மாநிலத்திலும் குறிப்பாக தமிழகத்தில்  இருந்து தோன்றவில்லை என்பது வியப்பல்லவா? அல்லது வேதனை அல்லவா என்று கூட சொல்லலாம்.

அரசியல்  வாழ்க்கை என்பது மேடையில் பேசி மக்களை திருப்திபடுத்துவது அல்ல, ஒரு கட்சியினைப் பற்றி கட்சியினர் கிண்டலும் கேலியும் செய்து மக்கள் கூட்டத்தில் பேசி  கை தட்டல் பெறுவதும் அரசியல் அழகல்ல. Edmund Burke என்ற அரசியல்  வல்லுநரின் ஆங்கிலேய நாடாளுமன்ற பேச்சு இன்றும் நினைவு கூறப்படுகின்றது. வரலாற்றில் வாழ்கிற அதற்கும் மேலாக அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற பேச்சு பண்டித நேருவால் கேட்கப்பட்டு, ஈர்க்கப்பட்டது என்பதனை நாடாளுமன்ற பதிவேடுகள் பறை சாற்றும். அரசியல் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும் நேர்முறை அணுகுமுறையோடு மேற்பட்ட கட்சிகளையும் தலைவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். இதுதான் இந்தியா கண்ட 72 ஆண்டுகள் முன்னேற்றம்.

அன்று இந்தி வேண்டாம், இந்தி படித்தால் இழிவு என்று மேடை கட்டி அறை கூவி, இந்தி எழுத்துகளை எல்லாம் விளம்பரப் பலகைகளில் இருந்து தாரினால் அழித்து, பூரித்த மக்களின் நிலை இன்று என்ன? தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லுகின்றவர்கள் கடை வீதியில்  காணுகின்ற வியாபார பலகைகள் – Ramu Jewellers, Hotel KrishNa, Muruga Stores, Saraswathy Jewellery Mart  என்ற ஆங்கில தமிழில் கண்டும் காணாமலும் போவது ஏன்?

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!  என்று போராடுவோர் கண்களில் இதெல்லாம் தெரிவதில்லையா? அது மட்டுமல்ல, அடிக்கடி வேடிக்கையாக சொல்லுகின்ற செய்தி ஒன்று உண்டு. daddy, school என்று பேசுகின்ற தமிழன், மற்றொரு தமிழனைப் பார்த்து தமிழில் பேசுகின்றாரா என்பது கவலைக்குரிய செய்தி. இதையும் மாற்ற மாட்டோம், அரசியல் சாசன சட்டத்தையும் திருத்த முயல மாட்டோம் என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

ஆங்கிலத்தில் பயணிக்கிறோம் என்று மார் தட்டி சொல்வார்கள். அதனால், ஆங்கிலத்தில்கூட இலக்கண வரையின்றி பேசுவார்களா?  இன்னும் சொல்லப் போனால் உலக அரங்கில் ஒரு காலத்தில் பொது மொழியாக இருந்த ஆங்கிலம் இன்று சுருங்கி இங்கிலாந்தில் முழுமையாக பேசப்படவில்லை என்பது உலகம் காணுகின்ற காட்சி.

 – நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம்

                (பார்வை பயணிக்கும்…)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *