BREAKING NEWS

விக்கிரவாண்டியில் தி.மு.க., நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனுக்கள் நாளை முதல் பெறப்பட உள்ளது.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

விக்கிரவாண்டி – தி.மு.க., நாங்குநேரி-காங்கிரஸ்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுவையில் காமராஜ் நகர் தொகுதி, இந்த 3 தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடனும், கட்சியின் முன்னோடிகளுடனும் விவாதித்தோம், கலந்து பேசினோம். அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

விருப்பமனு

கேள்வி: தி.மு.க. சார்பில் போட்டியிடும் விக்கிரவாண்டி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?

பதில் : நாளை மறுநாள் வேட்பாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறார். எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்துபேசி இன்றைக்குத்தான் நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, தேர்தல் பிரசாரம் குறித்து அறிவிப்போம்.

வேட்பாளர்கள் பட்டியல்

கேள்வி : வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில் : விருப்பமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் 23ல் இருந்து 29-ந் தேதி வரை என்று அறிவித்துள்ளதில், எந்தவிதச் சங்கடமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள், எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இன்றைக்கே முடிவு செய்து விட்டோம். நாளை மறுநாள் தி.மு.க.,விலும், காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனுக்களை முறைப்படி வாங்கப் போகிறோம். அதேபோல், விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்கவிருக்கிறோம். அந்தப் பணிகளை வேகமாகவும், உடனடியாகவும் செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்.

கேள்வி : காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது?

பதில் : இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும்.

நாளை விருப்பமனு

இவ்வாறு அவர் கூறினார். மேலும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று விடுத்துள்ள அறிவிப்பில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, வரும் 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். விருப்பமனுக்கள் மீதான நேர்காணல் வரும் 24-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் 10 மணியளவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால், 6-ந் தேதி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *