வள்ளலார் இலக்கியக் கொள்கை..!

“புத்துருவில் தமிழ் மொழிமாண் புனை யெழிலிற்

பொலிந்திலகச்  சித்தியெலாம்  சித்திபெறச்

சிவயோகம் யோகமுறச் சத்தியமும்

அருளொழுக்கும்  தமனியப்பொன் தவிசேற

நித்தியமாம் ஞானநிலை நிலவுலகில் பெருகிஎழ”

வள்ளலார் பாடினார் எனவும்,

கல்வியினாற் கேள்வியினாற் கவிஇயற்றும் திறமையினால்

சொல் விநய நாவளத்தால் உரை விளக்கும் சூழ்ச்சியினால்

நல்வசன  நடை அதனால் நமக்கிணை யார் என்றுலகில்

புல்குசெருக்கு அத்தனையும் புலர்ந்து பொடிபடவும்”

தோன்றியருளினார் எனவும் பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும் பிறரும் போற்றிப் பரவுகின்றனர்.

அடிகளாரின் புலமை நலமும் அருளாற்றலும்,

” மறைவிளங்க ஆகமவாய்மைகள் விளங்கச் சைவநெறித்

துறை விளங்க வடகலை யும் தென்தமிழும் துணிபொருளின்

நிறைவிளங்க நீடுயிர்கள் நெறிவிளங்க நிலைவிளங்கப்

பொறை விளங்கப் பொய்புகுதாது ஏழையேம் புலம்விளங்க”

நிலவியதென உபயக் கலாநிதி பெரும் புலவர் தொழுவூர் வேலாயுதனார் போற்றுகின்றார்.

 

இறை உணர்வுக்கு ஆட்பட்ட பெரியோர்கள் தம் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் சீரியதாகவும் பிறர்க்குப் பயன்படுவதாகவும் அமைத்துக்கொள்ள முற்படுகின்றனர். அவர்கள் உள்ளத்தில் ஊறித்ததும்பும் அன்பு உணர்வு தெய்வீக நலங்கலிந்த திருப்பாடல்களாகச் சிலருக்கு வெளிப்படுகின்றன. அத்தகைய அருளாளர்களைப் பக்தர்கள், அன்பு வழிப்பட்டவர்கள் என்றும் அழைக்கிறோம். பக்தி என்பதைப் பத்தி என்றும் பத்தராய்ப் பணிவார் என்றும் அன்பர் ஆகுநர் என்றும் கூறுவர்.

அடியார்க்கு இலக்கணமாகிய பத்து இயல்புகளை அகத்திலக்கணம் பத்து, புறத்திலக்கணம் பத்து என இரண்டாக்கிக் கூறுவர். திருநீறும் கண்டிகையும் அணிதல், பெரியோரை வணங்கல், சிவனைப் புகழ்ந்து பாடுதல் சிவனின் நாமங்களை உச்சரித்தல், பூசித்தல், சிவ புண்ணியங்களைச் செய்தல், சிவப் புராணம் கேட்டல், வழிபாடு செய்தல், அடியார்க்கு வேண்டுவன தருதல் என்பன புறத்திலக்கணமாகவும், சிவன் புகழைக் கேட்குங்கால் மிடறு விம்மல், நாத்தழுதழுத்தல், இதற்குடித்தல், உடல் கு வாங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், கண்ணீர் அரும்புதல், வாய்விட்டழுதல், மெய்ம்மறத்தல் என்பன அகத்திலக்கணம் என்பர். பத்துக்கொலாம் அடியார் செய்கைதானே என்பார் திருநாவுக்கரசு நாயனாரும் மணிவாசகப் பெருமானுக்கு வணக்கப்பாடல் ஒன்று கூறுமிடத்து கச்சியப்பமுனிவர், மனமாகிய வயலை, பக்தி என்றும் ஏர்கொண்டு உழுது, ஞானம் என்றும் விதையினை விதைத்து அழுந்திய ஆர்வமாகிய நீர் பாய்ச்சி ஐம்பொறிக் குறும்புகளாகிய களைகளை நீக்கி ஆனந்தம் என்றும் நெற்கதிரை விளைத்து அதனை வையகத்திற்கு வாரிவழங்கும் வான் கருணை உடையவராக மணிவாசகப் பெருமான் திகழ்கின்றார் என்பார்.

உள்ளம் ஆகிய புலத்தினைப்

பக்தி ஏர் உழுது

தெள்ளும் ஞான வித்துறுத்து நற்

சிரத்தை நீர் பாய்ச்சிக்

கள்ளவான் பொறிகள் கட்டு

ஆனந்தம் விளைத்துக்

கொள்ளை கூறும் மாணிக்கவாசகன்

கழல் குறிப்பாம்.

பக்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாடும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கிக் கண்டு கொண்டார் என்று அக்கோர் பதிகத்தின் முதற்பாவில் மணிவாசகப் பெருமான் குறிக்கிறார். அன்பு நெறி பழவினைகளை அகற்றுமென்றும், வினை நீங்கவே விளங்கிய முதல்வனின் திருவருள் விளையுமென்றும் குறித்தார்.  ஆண்டவனுக்கே அன்புநெறி உகந்தநெறி.

மதிநலம் வாய்க்கப்பெற்றவர்கள் தம் அறிவாராய்ச்சிகளாலும் பொறிபுலன் உணர்வுகளாலும் உலக வாழ்வின் இயல்புகளையும் நலங்களையும் அறியத் தலைப்பட்டு ஈரில்லாப்பதங்கள் யாரையும் கடந்த மாரிலாப் பொருளாகிய தலைவனின் மாட்சியை உணர்ந்து  அருமையை அறிந்து கனிந்து கசிந்து கண்ணீரில் நினைந்து அன்பின் பிழம்பாகத் தம்மை உடையவனுக்கு ஆளாக்கிக்கொள்கின்றனர்.

இவ்வாறாக,  ஞானத்தில் முதிர்ச்சியாக அறிவாராய்ச்சியில் மலர்ச்சியான அன்பின்  உருக்கமாக, திருவருட் வேட்கையின் பெருக்கமாகப் பக்தி தழைக்கின்றன. ஞானத்தின் பெருவருளே பக்தி என்றும் கூறுவர்.

ஞானத்தையே ஈசன்பால் அன்பே என்றனர்  வானம் உண்டார் என்பது பெரிய புராணம்.

உண்மையான மனக்கனிவின் ஊற்றுக பக்தி உணர்வுப் பாய்ந்து வெளிப்படும்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து

ஊற்றெழுங் கண்ணீர் அதனால்

உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே !

நன்னிதியே ! ஞானநடத்தரசே !  என் உரிமை நாயகனே

என்று வளைந்து வளைந்து ஏத்துதும்

நாம்  வம்மின் உலகியலீர் !

என்று கசிந்து கண்ணீர் மல்கப் பாடிப்பாடி உருக வேண்டுவது பக்தியின் மெய்ப்பாடாகும்.

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உள்

விரையாற் கழற்கு என்

கைதான் தலைவைத்துக் கண்ணீர்

ததும்பி, வெதும்பி, உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி

கயகய போற்றி என்றும்

கைதான் நெகிழவிடேன் உடையாய்

என்னைக் கண்டு கொள்ளே !

 

என்றும் திருவாசகப் பாட்டால் பக்தி உணர்வின் இயல்புகளைக் காணலாம்.

–  டாக்டர் ஔவை நடராசன்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *