BREAKING NEWS

வரவேற்கத்தக்க அ.இ.அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத் தீர்மானங்கள்..!

சமீபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூடி முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  இதில் அரசியல் ரீதியாக சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழைப்பது மற்றும் தமிழ்நாடு தின அறிவிப்பு, கீழடி அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து தமிழக அரசு முன்னெடுத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், சில தீர்மானங்கள் தொலை நோக்குப் பார்வையுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக காவிரி-கோதாவரி ஆறுகளின் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நிதிகளை ஒதுக்கி இணைப்புத் திட்டத்தை உறுதி செய்திட வேண்டும் என்றும், அதேபோல தமிழக மாணவர்களை மிகவும் பாதிக்கச் செய்யும் நீட் மருத்துவத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானித்துள்ளதை நடுநிலையாளர்களும் வரவேற்கச் செய்கின்றனர்.  காலம் காலமாகப் பேசிவரும் காவிரி-கோதாவரி இணைப்பை சாத்தியமாக்கினால்தான் தமிழகத்தின் தண்ணீர் தேவை நிரந்தரமாகத் தீர்வு ஏற்படும் என்பதால் இந்தத் தீர்மானம் தமிழக மக்களிடம் அரசியல் பேதமில்லாமல் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.  அத்துடன் இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி மாநிலங்களவையில் அ.இ.தி.மு.க உறுப்பினர்கள் பேச வேண்டும்.  அதன் மூலம் தமிழகத்தின் வேறு கட்சிகளும் ஆமோதித்து பேசுகின்ற வாய்ப்புகள் உண்டாகும்.

இந்தியாவில் தமிழகத்தில்தான் மருத்துவக் கல்லூரிகள் அதிகம்.  ஆனால் இந்த நீட் தேர்வு மூலம் வடமாநிலத்து மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் சூழல்கள் தற்போது உருவாகின்றன.  மேலும் இந்தியாவிலேயே திறமையான டாக்டர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர்.  தற்போது நீட் தகுதித்தேர்வு என்பதன் மூலம் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் தீர்மானமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மாநில சுயாட்சி மற்றும் இருமொழிக் கொள்கைகளில் தொடர்ந்து, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம் என்கிற தீர்மானமும் இன்றைய அரசியல் தட்பவெப்பநிலையில் அவசியமானதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  மருத்துவப் பட்ட மேற்படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்தியஅரசு முன் வரவேண்டும் என்கிற தீர்மானமும், காலத்துக்கேற்ற தமிழக மக்களின் குரல்கள்தான். தமிழகத்தின் அருகாமையில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தும் ஒரு தீர்மானம் பேசுகிறது. இலங்கையில் புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்ச ஈழத் தமிழர்களை சமமான முறையில், பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக அ;இ.அ.தி.மு.க கட்சியின் அமைப்பு விதிகளில் ஒரு மாற்றத்தை இந்தப் பொதுக்குழு கொண்டு வந்துள்ளது பலரது புருவங்களை உயர்த்தி இருக்கிறது.  கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டு வர முடியாத ஒரு துணிச்சல் மிக்க தீர்மானம் அது! அ.இ.தி.மு.க-வின் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம் ஆகும்.  இதன் மூலம் திடீரென வாரிசுகளை கட்சி அமைப்புகளில் கொண்டு வருவது தடுக்க முடியும்.  மேலும், மாற்றுக் கட்சியிலிருந்து வருவோர்க்கு உடனடியாக கட்சிப் பதவிகள் வழங்குவதையும் இந்தத் தீர்மானம் தடைசெய்கிறது.  இது ஒரு ஆரோக்கிமான உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதில் உறுதியோடு நிற்பதுதான் இத்தீர்மானம் உயிர்பெறும் என்பது நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது.  மொத்தத்தில் நடைபெற்று முடிந்த இந்த அ.இ.தி.மு.க-வின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள் வழக்கமானதல்ல என்பதை நிறைவேற்றிய தீர்மானங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *