BREAKING NEWS

வங்கித் துறையில் களமிறங்கும் எல்.ஐ.சி.


 

ஐ.டி.பி.ஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் எல்.ஐ.சி நிறுவனம் விரைவில் வங்கி துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வாராக் கடன்

வாராக் கடன் பிரச்சினையில் சிக்கி தத்தளித்து வரும் ஐ.டி.பி.ஐ வங்கியை அதிலிருந்து மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.டி.பி.ஐ வங்கியில் மத்திய அரசு 80.96 சதவீத பங்குகளையும், அதற்கு அடுத்தபடியாக எல்.ஐ.சி நிறுவனம் 10.82 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.

வாராக் கடன் பிரச்சினை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் ஐ.டி.பி.ஐ வங்கி பங்குகளை வாங்க எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் எல்.ஐ.சி அதற்கான முயற்சிகளில் களமிறங்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மூலதனம்

இருப்பினும், ஐ.டி.பி.ஐ வங்கியில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை கையகப்படுத்துவது குறித்து எல்.ஐ.சி இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. எனினும், அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஐ.டி.பி.ஐ வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள பங்கு மூலதனத்தை 50 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் வழிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது மத்திய அரசின் பங்கு மூலதனத்தை எல்.ஐ.சி கையகப்படுத்துவதன் மூலம் ஐ.டி.பி.ஐ வங்கியை அது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply