BREAKING NEWS

லாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.


 

 

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணமாக நாடு முழுவதும் ரூ.18 ஆயிரம் கோடியை பெற்றுக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டேங்கர் லாரி

இந்த வேலை நிறுத்ததில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் லாரி வேலைநிறுத்தம் முழு வீச்சில் நடைபெறும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. இதன்படி 4.50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்ததில் பங்கேற்று, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள், தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர்லாரி உரிமையாளர் சங்கம், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

சரக்கு புக்கிங்

சேலத்தில் லாரி வேலை நிறுத்தம் காரணமாக நேற்று செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த லாரிகளில் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தன.

லாரி வேலை நிறுத்ததிற்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த 15-ந் தேதி முதல் வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங்கையும், நேற்று முன்தினம் முதல் மாநிலத்திற்குள்ளான சரக்கு புக்கிங்கையும் நிறுத்திவிட்டனர்.

சரக்கு தேக்கம்

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளி, இரும்பு, சிமெண்ட், தானியங்கள், மஞ்சள், பால் பவுடர், மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் தேக்கமடைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கும் லாரிகள் வேலை நிறுத்தினால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பருப்புகள்

ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள், காய்கறிகளின் வரத்து முற்றிலும் நின்றுபோகும் சூழல் உருவாகியிருக்கிறது. இவை நிற்கும் பட்சத்தில், அதன் விலை பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல், தமிழகத்தில் நடக்கும் வேலை நிறுத்ததில் மினி லாரிகளும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அனைத்து வித சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் முடங்கும். மாநில அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

தொழிலாளர்கள்

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 1 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிக்கப்படவுள்ளனர்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், “திட்டமிட்டப்படி இன்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. தமிழகத்தில் 4.50 லட்சம் சரக்கு வாகனங்கள் இன்று இயக்கப்படாது. மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

பொதுமக்களும் எங்களது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வரும் 22-ந் தேதி தங்களது சொந்த வாகனங்களை இயக்காமல் நிறுத்திவைக்க வேண்டும்.

வருவாய் இழப்பு

டீசல் விலை உயர்வு, சுங்ககட்டண உயர்வால் பொதுமக்களும் பாதிக்கபடுகிறார்கள். எனவே அவர்களும் எங்களுடன் சேர்ந்து எதிர்ப்பை காட்ட வேண்டும். வேலை நிறுத்தினால் தினமும் மத்திய, மாநில அரசுகளுக்கு சுமார் ரூ 200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். தமிழகத்தில், 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முழுமையாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதனால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கும்,’’ என்றார்.




Leave a Reply