BREAKING NEWS

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது என்று மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவேக் தேவ்ராய் குழு

ரெயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொணட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015-ம் ஆண்டு வழங்கியது. உலகில் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக ரெயில்வே துறை இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 1,26,174 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2.30 கோடி பயணிகள் பயணித்து வருகின்றனர். நாடு முழுவதும் 7,421 சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொருள் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மோசமான பரிந்துரை

மக்கள் வரிப்பணத்தில் 1.16 லட்சம் கி.மீ. தூரத்திற்கு இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. மேலும் ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பொதுத்துறையில் 14 லட்சம் தொழிலாளர்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து சேவையை பொதுத்துறையில் இருந்து தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்துடன் விவேக் ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. இந்த மோசமான பரிந்துரைகளில் சிலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி விட்டது.

ரெயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவையில்லை என்ற குழுவின் பரிந்துரையை ஏற்று தனி நிதிநிலை அறிக்கை முன்வைப்பதை கைவிட்டு விட்டது. அதனை மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் அவசியமில்லை என்பதையும் செயல்படுத்தும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

தனியார்மயம் கூடாது

பொதுத்துறையின் பயணிகள் ரெயிலை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று, தற்போது தமிழ்நாடு உட்பட சில ரயில்வே மண்டலங்களில் பயணிகள் ரயில்களை ரத்து செய்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. அதனை கைவிட வேண்டும். ரயில்களை தனியாரிடம் விடுவதன் மூலம் அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயிக்கவும், லாபம் தரக்கூடிய வழித்தடத்தில் மட்டுமே ரயில்களை இயக்கி, பயணிகள் சேவையை சுருக்கி விடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் நலன் கருதி விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *