BREAKING NEWS

ரூ.7,450 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்.

ரூ.7,450 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்.


சென்னை, மே 21-

அம்ருத் மற்றும் பிற திட்டங்களின் கீழ் 7,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் இணைந்து நடத்தும், ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில், ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்கு திட்டம்-2023ல் அறிவிக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களை, குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், செயல்படுத்துவது குறித்தும், இத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் திறனை உலகளவில் மேம்படுத்தும் வகையில், குடிநீர் துறையில், உலக அளவில் தலைசிறந்த வல்லுனர்களைக் கொண்டு, பயிற்சியும், சிறந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

5 ஆண்டுகால ஆட்சி

இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

புரட்சித் தலைவி ஜெயலலிதா 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், நகர்ப்புறம் மற்றும் ஊரக குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, மகத்தான சாதனை படைத்தார்கள். சென்னை மாநகரில் மட்டும், குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக, 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், 3,256 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

7,382 மில்லியன் லிட்டர் குடிநீர்

ஜெயலலிதா வழியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2016-17 முதல் ஏப்ரல்-2018 வரை, 5,356 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில், 60,904 குடிநீர்த் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு, 7,382 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

2050ல் 2,039 டி.எம்.சி.,யாக உயரும்

ஜெயலலிதா பொற்கால ஆட்சியில், இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், ஊரகப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், 99.11 விழுக்காடு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பருவமழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நீராதாரமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டில், 1,921 டி.எம்.சி.,ஆக இருந்த குடிநீர் தேவைப்பாடு, 2050-ம் ஆண்டில், 2,039 டி.எம்.சி.ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நீரின் தேவை மற்றும் வழங்குதலில் உள்ள, பெரிய இடைவெளியை ஈடு செய்வதற்கு, நீர் பயன்பாட்டின் திறமையை மேம்படுத்துதல், ஏரிகள் மற்றும் குளங்களில், இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ள நீரை, சுத்திகரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், கடல்நீரை குடிநீராக மாற்றுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அரசு, மேற்கொண்டு வருகிறது.

33 குளங்கள் சீரமைக்க ரூ.21.85 கோடி

பெருநகர சென்னை மாநகராட்சியில், 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வில்லிவாக்கம் – சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் குளம் 33 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை சீர்மிகு நகரம் நிதியிலிருந்து ரூ.21.85 கோடியில் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 15 ஏரிகள் மற்றும் திருக்கோயில் குளங்கள் சென்னை சீர்மிகு நகரங்கள் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

தொண்டு நிறுவனங்கள் ஆர்வம்

மீதமுள்ள 158 ஏரிகள் மற்றும் திருக்கோயில் குளங்கள் சென்னை மாநகராட்சியும் சமூக அக்கறையுடன் உள்ள வணிக பொது நிறுவனங்கள் (கார்பரேட் கம்பெனிகள்) இணைந்து மேம்படுத்த, முதலமைச்சர் எடப்பாடியார் உத்தரவுடன் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய தொழில் கூட்டமைப்பினர் ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகள் மூலம் பணிகள் துவங்கப்பட உள்ளது. அசோக்லைலண்டு, டி.வி.எஸ். யமஹா போன்ற பெரிய நிறுவனங்கள், மீதமுள்ள நீர்நிலைகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்து, தற்போது பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அரசின் மிகப் பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னையில் 24 மணிநேரமும் குடிநீர் (பாக்ஸ்)

சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், அம்ருத் மற்றும் பெரிய திட்டங்களின் கீழ், மொத்த ரூ.7450 கோடி மதிப்பீட்டில், 18 பெரிய குடிநீர்த் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்போது 11 குடிநீர் திட்டங்களில், பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 7 குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் “தொலைநோக்குத் திட்டம்-2023” ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழகத்தில், 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் வகையில், 14 மிகப் பெரிய குடிநீர்த் திட்டங்கள், 21,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றாக செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

100 எம்.எல்.டி., திறன்

சென்னை மாநகரின் வட பகுதிகளில் நீர் வழங்குவதற்காக, மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில், 100 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றும், சென்னை மாநகரின் தென் பகுதிகளில் நீர் வழங்குவதற்காக, நெம்மேலியில் ரூ.834 கோடி மதிப்பீட்டில், 100 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

பருவமழை பற்றாக்குறை

கடந்த 2 ஆண்டுகளில், பருவமழையின் மூலம் கிடைக்கும் நீரில் பற்றாக்குறை அதிகரித்ததால், நெம்மேலியில் 150 எம்.எல்.டி., திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றும், போரூரில் 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றும், அமைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைநோக்குத் திட்டம் 2023ல் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், 24×7 அதாவது எந்நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதை தலையாய கடமையாக கொண்டு, முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பாக்ஸ்.

சென்னையில் 2வது கட்ட பயிற்சி?(பாக்ஸ்)

பொறியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், 7 குழுக்களாக 170 நபர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க, உலக வங்கி நிதியுதவியுடன், அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் உள்நாட்டுப் பயிற்சி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி என இரு கட்டங்களாக இப்பயிற்சியை செயல்படுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாக ஆணையரக பொறியாளர் உட்பட 24 நகராட்சி பொறியாளர்களுக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில், மணிலா குடிநீர் நிறுவனம் மற்றும் மேனிலாடு குடிநீர் சேவை நிறுவனம் மூலம், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் குழுவின் 2-வது கட்ட பயிற்சி வகுப்பு, 5 நாட்கள் நடக்கிறது.

குளோரின் பயன்பாடு புத்தகம் வெளியீடு (பாக்ஸ்)

இந்தக் கருத்தரங்கில், குடிநீர் துறையில் உலக அளவில் தலைசிறந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு, பயிற்சியும், சிறந்த ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர். எனவே, அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இக்கருத்தரங்கிலும், பயிற்சியிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று, அதனை திட்ட அமலாக்கத்தில் செயல்படுத்திட உரிய நேரத்தில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேட்டினையும் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் குடிநீர் திட்டப் பணிகளில் குளோரின் பயன்பாடு என்ற புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.




Leave a Reply