BREAKING NEWS

 ரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு. 

 

 

 

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் துளை போட்டு ரூ. 6 கோடி ரொக்க பணம் கொள்ளை தொடர்பாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கி உள்ளது.

ரூ.5.78 கோடி கொள்ளை

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டு, சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார்? எந்த இடத்தில் வைத்து இந்த துணிகர கொள்ளை நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் திணறினார்கள்.

ரூ.5.78 கோடியை அள்ளிச்சென்றது வட இந்திய கொள்ளை கும்பல்தான் என்று உறுதியாக தெரியவந்த நிலையில், கொள்ளையர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. என்றாலும் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனம் தளராமல் போராடி, தேசிய அளவில் பல்வேறு தகவல்களையும் பெற்று அந்த கொள்ளை கும்பல் பற்றி துப்பு துலக்கி விட்டனர்.

பழைய நோட்டுகள்

சரியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை போலீசார் நெருங்கியுள்ளனர். இது பற்றிய முழு விபரம் வருமாறு:

பொதுத்துறை வங்கிகளில் சேர்ந்து விடும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் பயன்படுத்த முடியாத கிழிந்த ரூபாய் நோட்டுக்களை அந்தந்த வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதன்படி சேலம் மண்டலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் சேர்ந்து விட்ட சுமார் 342 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் (தடம் எண்.11064) ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 342 கோடி ரூபாயும், பண நோட்டு மதிப்புக்கு ஏற்ப பிரித்து 226 அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டன.

எக்ஸ்பிரஸ் ரெயில்

அந்த 226 அட்டை பெட்டிகளும் ஒரு ரெயில் பெட்டிக்குள் முழுமையாக அடுக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. சேலம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 19 பயணிகள் பெட்டிகளுக்கு மத்தியில் பணம் இருந்த பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள் (ஆகஸ்டு 9-ந்தேதி) காலை அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்து சேர்ந்தும் பணம் இருந்த பெட்டி மட்டும் தனியாக யார்டு பகுதிக்கு கொண்டு நிறுத்தப்பட்டது.

அன்று பகல் 11 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் 226 பணப்பெட்டிகளை எடுத்துச் செல்ல வந்தனர். ரெயில் பெட்டியின் “சீல்” அகற்றி விட்டு உள்ளே சென்ற ஊழியர்கள், 4 அட்டை பெட்டிகள் உடைத்து திறக்கப்பட்டு பண நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் பெட்டியின் கூரையில் 2 அடி நீளம் 1½ அடி அகலத்துக்கு துளை போடப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

1,000 ரூபாய் நோட்டுகள்

ரெயில்வே போலீசார் எழும்பூர் யார்டு பகுதிக்கு சென்று கொள்ளை நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தனர். பணம் இருந்த 4 பெட்டிகள் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒரு பெட்டியில் இருந்த ரூ.500, ரூ.1000 மதிப்புள்ள நோட்டுக்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி இருந்தனர்.

மற்றொரு பெட்டியில் பாதி அளவு பணத்தை எடுத்திருந்தனர். 2 பெட்டிகளில் குறைந்த மதிப்புடைய 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் தொடவில்லை. மொத்தம் ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

கியாஸ் கட்டர்

4 பேர் சேர்ந்து கியாஸ் கட்டர் மூலம் ரெயில் பெட்டி கூரையில் துளை போட்டிருப்பது தடயவியல் சோதனையில் தெரிந்தது. ஆனால் அவர்கள் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடிக் கொண்டிருந்தபோது கைவரிசை காட்டினார்களா? அல்லது நின்றபோது கைவரிசை காட்டினார்களா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. துளை போடப்பட்ட பெட்டி கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்ததால், அங்கே துளைக்கான வெல்டிங் போடப்பட்டிருக்கலாமா என்று விசாரணை நடந்தது.

கண்காணிப்பு கேமிரா

இதையடுத்து சேலம்- விருத்தாச்சலம் இடையில் உள்ள சுமார் 138 கி.மீ. தூர வழித்தடத்தில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு, தாம்பரம் ரெயில் நிலைய சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த பெட்டி எழும்பூர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த போது கொள்ளை நடந்து இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் காலையிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்ட நிலையில் 11 மணிக்குத்தான் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வந்தனர். எனவே இடைப்பட்ட 2 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதிலும் சரிவர துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சேலம் முதல் சென்னை வரை ரெயில் நிலையங்களில் விசாரித்தனர். சுமார் 80 ரெயில்வே தொழிலாளர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கப்பட்டனர். ஆனால் அதிலும் துப்பு துலங்கவில்லை.

இதையடுத்து தொழில் நுட்ப உதவியை பயன்படுத்தி, கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடம் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர்.

செல்போன் உரையாடல்கள்

சேலம் முதல் விழுப்புரம் வரை பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்கள் உன்னிப்பாக கேட்கப்பட்டன. அதில் சந்தேகப்படும் படியான உரையாடல்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அந்த உரையாடல்கள் எந்தெந்த எண்கள் கொண்ட மொபைல் போன்களில் இருந்து சென்றுள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் அந்த செல்போன் எண்களை பயன்படுத்துபவர்கள் சேலம் பகுதிக்கு புதிதாக வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்களை உடையவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தனர் என்று ஆய்வு நடந்தது. தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மத்தியபிரசேத கொள்ளையர்

சில மாத கடும் போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில் அந்த செல்போன்களுக்கு உரியவர்கள் மத்திய பிரதேசம், பீகாரை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் கொள்ளையர்கள் அவர்கள் என்ற துப்பு துலங்கியுள்ளது. அந்த கொள்ளையர்கள் வட இந்தியாவில் பல நகரங்களில் பெரிய அளவில் கைவரிசை காட்டியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 11 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே கொள்ளையர்கள் யார் கொள்ளை போனது எப்படி என்பது குறித்து முழு விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா (பாக்ஸ்)

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது.

மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சி.பி.சி.ஐ.டி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது. நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டதில் கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்.

தனிப்படை (பாக்ஸ்)

சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறுகையில், `மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ெரயில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப் படையினரிடம் சிக்கி உள்ளனர். அதே நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு ெரயிலில் பணம் கொண்டு செல்வது வங்கி மற்றும் ெரயில்வே அதிகாரிகளுக்கு மட்டும் ெதரியும். எனவே அக்கும்பலுக்கு இது குறித்த தகவல் தெரிவித்தது யார்? எனவும் விசாரணை நடத்த இருக்கிறோம்’ என்றனர்.




Leave a Reply