BREAKING NEWS

ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் சிக்கியது – கட்டுமான நிறுவனங்கள், வீடுகளில் சோதனை வருமானவரித்துறையினர் சோதனை.

 

கட்டுமான நிறுவன குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில், நேற்று வருமான வரித் துறை நடத்திய சோதனையில் 80 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டிடப்பணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவருக்குச் சொந்தமான எஸ்.பி.கே கட்டுமான நிறுவனக் குழுமம் தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியில், இவரது நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர அரசு சார்ந்த பல பணிகளை எஸ்.பி.கே நிறுவனக் குழுமம் செய்து வருகிறது. இந்தநிலையில் இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தாக தொடர்ந்து புகார்கள் வந்தது

சோதனை

இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கையை தொடங்கினர். சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட இவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான செய்யாதுரை, அவரது மகன் நாகராஜன் ஆகியோரது அருப்புகோட்டையில் உள்ள வீடு மற்றும் சென்னையில் ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம்-, பெசன்ட்நகர், அண்ணாநகர் உள்பட 30 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.

அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து சோதனை நடந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பணம், தங்கம்

இதில் செய்யாத்துரையின் உறவினர் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தீபக் என்பவரது காரில் இருந்து ரூ.28 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், செய்யாத்துரையின் உறவினர் சென்னை சேத்துப்பட்டுவில் ஜோஸ் என்பவர் வீட்டில் இருந்து 81 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.100 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைப்பற்றப்பட்ட ரூ.100 கோடி பணமும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆவணங்கள்

மேலும் 30 வங்கி கணக்குகள் மற்றும் ரூ.600 கோடிக்கு சொத்து ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருவதுடன் வரிஏய்ப்பு தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்த பிறகு தான் முழு விவரங்களும் தெரிய வரும் என வருமான வரித்துறை அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தமிழக அரசுக்கு சத்துமாவு மற்றும் முட்டை சப்ளை செய்து வரும் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத தங்கம் மற்றும் ரொக்கப்பணம் பிடிபட்டது.ரூ.1350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நெடுஞ்சாலை பணி ஒப்பந்ததாரர் நிறுவனம் மற்றும் அவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.




Leave a Reply