தற்போதைய செய்திகள்

ராம ரத யாத்திரையால் சட்டசபையில் கடும் அமளி:தி.மு.க.வினர் கூண்டோடு வெளியேற்றம் சாலை மறியலில் ஈடுப்பட்ட மு.க.ஸ்டாலின் கைது…..

சென்னை,
ரதயாத்திரை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் கோட்டை எதிரே சாலை மறியலில் ஈடுப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ரத யாத்திரை
ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை நேற்று கேரளாவில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு வந்தது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ள நிலையில், இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
கவனஈர்ப்பு
இந்த நிலையில், ரத யாத்திரைக்கு தடைவிதிக்க கோரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசினார்.
முதல்வர் பேசுகையில், ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. 5 மாநிலங்களில் ரத யாத்திரை நடந்துள்ளது. அங்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக ரத யாத்திரை நடந்துள்ள நிலையில் தமிழகத்தில் எதிர்ப்பது ஏன்? தமிழகத்தில் யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை உண்டு. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்’ என்றார்.
தி.மு.க. கடும் அமளி
முதல்-அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் முழக்கம் எழுப்பினர். தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். பின்னர் சபாநாயகரின் இருக்கை முன் அமர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கடும் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது.
முதல்-அமைச்சரின் விளக்கத்தை ஏற்பதும்; ஏற்க மறுப்பது அவர்களின் விருப்பம். ஆனால், அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ப.தனபால் பல முறை எச்சரித்தார். இந்நிலையிலும் தி.மு.க.வினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இந்த கூச்சல் குழப்பத்துக்கு இடையே, மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்தார்.
வெளியேற்றம்
தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கோட்டை எதிரே மறியல்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கோட்டைக்கு எதிரே சாலையில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் கோட்டையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
Leave a Reply