ராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…

அண்மையில் வெளிவந்திருக்கும் ராட்சசி திரைப்படம் புதிய இயக்குநர் கவுதம் அவர்களின் படைப்பு.   ஜோதிகா நடித்த ஜோதிகாவின் படம்.  இப்படம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பல கண்டனக் குரல்களை ஏற்படுத்தியிருக்கிறது.  தேசியக் கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து போராட வேண்டிய மிக முக்கியமான சக்திகளான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்பை இந்தப் படம் பெற்றது நமக்கு வருந்தத் தக்கதே.  ஆனால், ஆசிரியர்கள் சில கேள்விகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்த படத்தை வரவேற்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.  ஏன் எனில் இந்தப் படத்தை பாஜக அரசு முன்வைத்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை எதைப் பேசுகிறது என்கின்ற பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்,

படம் என்ன சொல்கிறது….

புதிதாக ஒரு தலைமையாசிரியர் ஒரு கிராமத்துப் பள்ளியில் சேர்ந்து அந்தப் பள்ளியை மேம்படுத்த முனைகிறார்.  அந்தப் பள்ளி எவ்வாறு இருக்கிறது என்று இயக்குநர் காட்டியிருப்பதில்தான் நமது ஆசிரியர்களின் கோபம் அடங்கியிருக்கிறது.  பள்ளி ஆசிரியர்கள் ஒருசில ஆசிரியர்களைத் தவிர மாணவர்களைப் பற்றியோ கல்வியைப் பற்றியோ எந்த அக்கறையுமில்லாமல் அதில் சிலர் சொந்தத் தொழில் பார்த்துக் கொண்டுமிருக்கிறார்கள்.  சிலர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மாணவர்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.   விதிவிலக்காக சில நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.  சரி.  இப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்று சொல்ல முடியுமா நம்மால்?  சில காட்சிகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் வெறும் புனைவு என்று தள்ளி விட முடியாது.  தனியார் பள்ளிகள் பெருகி வளர்ந்ததற்கு அரசின் தவறான கொள்கை முடிவுகள் வழி விட்டிருக்கின்றன என்றாலும் அரசுப் பள்ளிகள் மக்களின் நம்பிக்கையை இழந்தததில் பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர்கள் பங்களிப்பு இல்லையென நம்மால் கூறி விட முடியாது.

ஆசிரியராக வரும் ஜோதிகா ஒரு சூப்பர் கதாநாயகி.  வரட்டுமே..  ஆயிரக்கணக்கான சூப்பர் கதாநாயகர்கள் படம் வந்திருக்கும் மண்ணில் இப்படி ஒரு சில கதாநாயகிகளும் உலவட்டுமே..  யதார்த்தத்தை அப்புறம் காப்பாற்றிக் கொள்ளலாம்.  எனவே, அவர் எல்லாவற்றையும் வெல்கிறார்.  மாற்றுகிறார்.  இங்கு அது முக்கியமல்ல.  அந்தப் படம் சுட்டிக் காட்டும் சமுதாயப் பிரச்சினைகள் என்ன?

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களை ஜோதிகா மிரட்டுகிறார். கட்டாயக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்கிறார்.  பள்ளிக்கூட வாசலில் ஒயின் கடை வைத்திருக்கும் கடைக்காரரை சோடா பாட்டிலை உடைத்து எச்சரிக்கிறார்.  என் மகனைக் கேள்வி கேட்க நீ யார் என்று வருகின்ற அரைவேக்காடு அரசியல்வாதியின் மகனை அவரை மீறி திருத்தி நல்வழிப்படுத்துகிறார்.  சரி இதற்கெல்லாம் மேலாக ஒன்பதாம் வகுப்பில் தேர்வில்  தோல்வியடைந்ததால் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்ட மாணவர்களைத் தேடிச் சென்று மீண்டும் பள்ளியில் சேர்த்து தேர்வு எழுத வைத்து அவர்கள் தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்கு தகுதியாகிறார்கள்.

இந்தக் கடைசி பிரச்சினைதான் கதையில் முக்கியப் பகுதியாகவும் அமைக்கப் பட்டிருக்கிறது.  பள்ளியிலிருந்து  ஃபெயிலாக்கப்பட்டு வெளியேற்றப்ப்பட்ட மாணவர்களை ஆசிரியர்கள் தேடிப் போவார்கள்.  அந்த ஒரு காட்சி இன்று இந்த தேசமே ஆதரிக்க வேண்டிய படமாக இந்தப் படத்தை உயர்த்துகிறது.  அவ்வாறு வெளியேற்றப்பட்ட  மாணவர்கள் செங்கல் சூளையிலும் கூலி வேலையிலும் அமர்த்தப் பட்டிருப்பார்கள்.  ஆசிரியர்கள் வந்து உங்களுக்கு பாஸ் போட்டு விட்டோம் நீங்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறியதும் அவர்கள் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு நமது கண்களில் நீரை  வரவழைக்கிறது.  கல்வித் துறை ஆணையின் மீதான இந்த அத்துமீறல் நடவடிக்கைக் குள்ளாகிறது.  ஆனால் அதற்குள் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்கின்ற செய்தி வர கல்வித் துறை பணிந்து தன் ஆணைகளை திரும்பப் பெறுகிறது.

இந்த இடத்தில்தான்  நாம் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது.  ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சியுறாவிட்டால் அந்த மாணவன் செங்கல் சூளையில்தான் நிற்க வேண்டும் என்று படம் சொல்கிறது.  ஆனால் இந்தக் கல்விக் குழு 3ம் வகுப்பு 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பில் பொதுத் தேர்வுகளை புகுத்த வேண்டும் என்று சொல்கிறது.  3ம் வகுப்பில் தேர்ச்சியுறாத குழந்தைகள் என்ன ஆவார்கள்,,,?

இந்த வரைவு அறிக்கை ஒரு இடத்தில் சொல்கிறது.  சிலர் படிக்கும் ஆர்வமில்லாதவர்களாக இயல்பிலேயே இருக்கிறார்கள் என்று.  இதன் பொருள் என்ன..  அவர்களுக்கு படிப்பு வராது.  அவர்களை படிக்க வைக்க முடியாது என்பதுதானே?

இந்தக் கேள்வி படத்தில் கேட்கப் படுகிறது… அவர்களுக்கு தகுதியில்லையென்றால் ஏன் ஃபெயிலாக்கக் கூடாது என்று கேட்கிறார்கள் ஆசிரியர்கள்.  உங்களுக்கு தகுதியிருக்கிறதா..  உங்களுக்கு தகுதித் தேர்வு வைக்கலாமா என்று கேட்கிறார் ஜோதிகா.  இதனை ஆசிரியர் தகுதித் தேர்வை படம் ஆதரிக்கிறது என்று புரிந்து கொள்கிறார்கள்.  ஆனால், படம் உங்களுக்கு தகுதித் தேர்வு வைப்பது எப்படி சரியில்லையோ அப்படித்தான் மாணவர்களுக்கு தகுதியில்லை என்று நீங்கள் கூறுவதும் என்றுதான் சொல்ல வருகிறது.

தனியார் பள்ளியினர் நடத்தும் தகிடு தத்தங்களும் அந்த ஆசிரியர்களின் உரிமையற்ற பரிதாப நிலையும் காட்டப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.  சில ஆசிரியர்கள் பின்வருமாறு கேட்கிறார்கள்.  தேசியக் கல்விக் கொள்கையே அரசுப் பள்ளிகளைக் குறைக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்று பரிந்துரை செய்கிற வேளையில் அரசுப் பள்ளிகளை உயர்த்திப் பேசுவதை விட்டு விட்டு இவ்வாறு அதீதமாக அவர்களைக் குறைவு படுத்திப் பேசியது சரியா என்று கேட்கிறார்கள்.  மேலும் இது தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கு வலு சேர்த்து விடாதா என்று கேட்கிறார்கள்.  ஒருவகையில் இதற்கான வாய்ப்புகள் இருப்பதை நான் உணர்கிறேன்.  ஆனால், ஒரு விசயத்தை நாம் எப்படி எடுத்துச் செல்வது என்பதைப் பொறுத்தே அது அமையும்.  இந்தப் படத்தை நாம் நமது ஆயுதமாக்கிக் கொள்ளாவிட்டால் அவர்கள் அதனை எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பொய்கள் எப்போதுமே வலிமையற்றவை.  அரசுப் பள்ளிகளின் குறைபாட்டை நாம் உணர்ந்திருக்கிறோம் அதனை சீர் செய்ய நாம் முற்படுகிறோம் என்பதில் நாம் காட்டுகிற அக்கறைதான்  தேசியக் கல்விக் கொள்கை மீது நாம் வைக்கும் விமர்சனத்தின்  பால் மக்களை ஈர்த்து வரும்.  அந்த சுயவிமர்சனத்தைத் தவிர்த்து விட்டு, நாங்கள் சரியாகத்தானே இருக்கிறோம் என்று பேசினால் அந்தக் குழு வைக்கும் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டு விடும்.  நமது குறைகளின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.

இயக்குநர் கவுதம் ஒரு சிறிய திருத்தத்தை செய்திருக்கலாம்.  ஜோதிகா மட்டுமே தனித்து இவ்வளவையும் செய்வதாகக் காண்பித்தற்கு பதிலாக அங்கிருந்த சில நல்ல ஆசிரியர்களின் துணையுடன் இந்தக் காரியங்களை செய்ததாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம்.  அப்போது அரசுப் பள்ளியிலுள்ள நல்ல ஆசிரியர்களைப் படம் பதிவு செய்திருக்கிறது என்று ஆகியிருக்கும்.  ஆனாலும் என்ன இந்தப் படத்தின் கதாநாயகி  கீதாராணி (ஜோதிகா) அரசுப் பள்ளி ஆசிரியர்தானே?

மேலும் இந்தப் படத்தில் காட்டப்படும் மாணவர்களுக்கிடையிலான சாதிப் பிரச்சினையும் தமிழ்த் திரைப்படம் பேசியாக வேண்டிய ஒரு உண்மையாகும்.  பல்வேறு சாதிகள் தங்கள் சாதியைக் குறிக்கும் விதமாக வண்ணக் கயிறு கட்டி வருவது, தமிழகத்தின் தென்பகுதிப் பள்ளிகளின் பத்தாண்டுகளுக்குள் வளர்ந்திருக்கும் வன்மையாகக் கண்டிக்கத் தக்க விசயம்.  உண்மையில் நமது பள்ளிகள் ஆசிரியர்கள் நினைத்திருந்தால் இந்தப் பழக்கம் பரவுமுன்னரே தடுத்திருக்க முடியும்.  ஏன் செய்யவில்லை   இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறதா?  அதனை ஓர் ஆசிரியர் எதிர்த்து ஒழிப்பதாகக் காட்டியிருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.  இதெல்லாம் சாத்தியமா என்று கேட்க வெட்கப் படுவோம்.  சாத்தியமாக்க முன்வருவோம்.

– ஓவியா, சமூக செயற்பாட்டாளர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *