BREAKING NEWS

ரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.


 

ரத்த கொடையாளர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் நேற்று சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உலக இரத்த கொடையாளர்கள் நாள் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டில் மூன்று முறை மற்றும் அதற்கும் மேல் இரத்ததானம் அளித்த ஆண் கொடையாளர்களுக்கும் மற்றும் இரண்டு முறை மற்றும் அதற்கு மேல் இரத்ததானம் அளித்த பெண் கொடையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தமிழகம் முதலிடம்

ரத்த கொடையாளர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும், தமிழக அளவில் சென்னை மவட்டம் முதலிடம் வகிப்பது சிறப்பம்சமாகும், உலக ரத்த கொடையாளர்கள் தினத்தின் இவ்வாண்டுக்குரிய கருப்பொருளாக “give blood, share life” என்ற விழிப்புணர்வு முழக்கமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ரத்ததான கொடையாளர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நமது மாவட்டத்தில் சென்ற வருடம் 2263 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் 125450 இரத்த யூனிட்டுகள் இரத்த கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது. மாவட்ட அளவில்

மொத்தம் 219221 இரத்த யூனிட்டுகள் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது.

பாராட்டுக்கள்

சென்னை மாவட்டத்தில் மூன்று மடங்கு இரத்த தான கொடையாளர்கள் இருப்பது பெருமைக்குரியதாகும். தமிழகத்தில் சென்னையில் மற்றும் மதுரையில் நடமாடும் இரத்த சேகரிக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. 99 சதவீதம் இரத்தம், தன்னார்வ இரத்ததான கொடையாளர் மூலம் தானமாக பெறப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் இரத்தம் 4 உயிர்களை காப்பாற்ற உதவுகிறது. பேறுகாலத்தின் போது ஏற்படும் உயிர் இழப்பினை தடுப்பதில் இரத்த வங்கி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு மனித உயிர்களை காப்பதில் மிக முக்கிய பங்காற்றும் இரத்ததான கொடையாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் இரத்த தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தன்னார்வ இரத்த தான கொடையளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் ப.தாட்சாயணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் உதவி இயக்குநர் (பொ) குமாரசாமி, சென்னை மருத்துவ கல்லுாரி போராசியர் மரு.சுபாஸ், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போராசிரியர் மரு.ராஜ்குமார் மற்றும் இராயப்பேட்டை மருத்துவமனை போராசிரியர் மரு.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதிகாரிகள் பங்கேற்பு

மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சந்தியா மகேஸ்வரி, இரத்தவங்கி மருத்துவ அலுவலர்களும், மாவட்ட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரிதிநிதிகள், தொடர் இரத்த கொடையாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட ஐசிடிசி மேற்பார்வையாளர் (பொ) வா.பரணி நன்றி தெரிவித்தார்.




Leave a Reply