தற்போதைய செய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாடு.

ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாடு
நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை,ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார் இதில் மன்றத்தின் முதல் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்கள் மன்றம்

அரசியலில் குதிக்க திட்டமிட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்தார். அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரிலும், வீடியோ கான்பரன்சிங் முறையிலும் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தினார்.

நிர்வாகிகள்

இந்தநிலையில் நேற்று அனைத்து மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் சென்னை வரவழைத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணி வரை நடைபெற்றது. மாவட்டங்களில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பூத் கமிட்டி

தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், பஞ்சாயத்து, ஒன்றியம், நகரம், மண்டலம் வாரியாக மன்றத்தின் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் இந்தப் பணிகளை வருகிற ஜூன் 2-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் வார்டுகளிகளி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார். ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்கட்டமைப்பு

ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் முடிந்தபின் மன்ற நிர்வாகிகள் சிலர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தனர். ஜூன் 2-ந் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரஜினி அறிவுறுத்தியிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Leave a Reply