BREAKING NEWS

மொழியாக்கம் ஒரு முடிவில்லாத பயணம்

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல மொழிபெயர்ப்பின்றி உலகம் சுழலாது என்று நூற்றுக்கணக்கான அறிஞர்கள் மொழிபெயர்ப்பு, முயற்சிகள், விளைவுகள், பயன்கள் பற்றி சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன.

திசையெட்டும், காலச்சுவடு, கணையாழி, அம்ருதா ஆகிய இதழ்கள் மொழிபெயர்ப்புக்கு முதலிடம் தருகின்றன.  ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் விரும்பி வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது.  சான்றாக வங்க மொழியின் பரிசு நூல்களை அனைத்து மொழியினரும் வரவேற்பது போல பிற மொழியாளர்களை ஏற்கும் சூழ்நிலை இல்லை.  எந்த நிலையிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பி வாங்கும் போக்கு மக்களிடையே இல்லை என்றே சொல்லலாம்.

மார்க்சின் மூலதனம், மலையாளத்தில் நாற்பது முறைகளும், தமிழில் எட்டு மொழிபெயர்ப்புகளும், இந்தியில் ஒன்பது மொழி பெயர்ப்புகளும் வந்த பிறகும் கூட வாகைசூடிய மொழி பெயர்ப்பு எதுவும் இல்லை.  ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்ற விவிலியத் தொடர் பிழையான மொழிபெயர்ப்பு.  ஊசியின் காது சொர்க்கத்தின் கதவாம்.  இப்படி பிழையான மொழிபெயர்ப்புகள் பல நிலைத்து விட்டன.  கம்பநாடரும்,   கா.ஸ்ரீ.ஸ்ரீ யும் பெற்ற வெற்றி எவரும் பெற்றதில்லை ,மராத்திய மொழியின் விற்பனையை விட தமிழின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் மாபெரும் வெற்றி  பெற்றன என்று காண்டேகர் மனமுருகி எழுதினார்.  மொழிபெயர்ப்பு என்பது சிக்கலுடையது என்ற கருத்திலேயே மூலநூலின் பொருண்மையை முழுவதுமாக எடுத்து மொழிவது பற்றிக் கம்பர்

“வையம் என்னை இகழவும், மாசு எனக்கு

எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே”

என்று குறிப்பிட்டார்.

மாந்தோப்பில் மனம் என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் மாந்தோப்பின் நிழலில் நிகழ்ந்த காதல் மணத்தைக் குறிக்கும்.  இதை நறுமணம் என்று மொழி பெயர்த்துவிட்டார்கள்.  ஒரே புறநாநூற்றுப் பாடலை மூவர் எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்றே விளக்கி பேராசிரியர்கள் எழுதினர்.

ஒரு பெருங்களஞ்சியத்தை டாக்டர் வ.செ.கு தலைமையில் தொகுத்து அமெரிக்காவில் வெளியிட்ட போது வாழ்த்துரை எழுதிய ஜார்ஜ் ஹார்ட்            “பெரியோரை வியத்தலும் இலமே – சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற தொடரை ஏன் முடித்திருந்தார் என்றே தெரியவில்லை.  அதற்கு விளக்கமும் அவரால் சொல்ல முடியவில்லை.

ஒரு மொழிபெயர்ப்புக்கு முன்னுரை எழுதிய ஓய்வுபெற்ற நீதியரசர் இது தமிழ்மொழிக்கு ஏற்பட்ட புதிய  விந்தேற்றம் என்று எழுதியிருந்தார்.

எழுத்தின் பொருள், எண்ணத்தின் செழுமை எடுத்துரைக்கும் பாங்கு, புதைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு விளக்கத்துக்காக மொழிபெயர்ப்பாளன் மாற்றும் கலைத்திறன், மூலமொழியில் 40 மதிப்பெண்ணும், படைப்புமொழியில் 60 மதிப்பெண்ணும் பெற்றால் மொழிபெயர்ப்பில் 60 விழுக்காடாவது வெற்றி பெற முடியும் என்பதும் ஐயப்பாடான கணக்காகவே உள்ளது.

மாமுனிவர் வறுத்த மீன்களை வாயில் மெல்ல இட்டுப்  பொறித்துக் கொண்டார் என்பதை வறுத்த வாதுமை  பருப்பை வாயில் மென்றார் என்று நான் மாற்றம் செய்தேன் என்று ஒருமுறை த .நா .சேனாபதி கூறினாராம். நூற்றுக்கு நூறு கல்வி வளமும் ,நூற்றுக்கு 80 பேர் இருமொழிப் புலமையும், 100க்கு 70 பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்பு செல்வாக்குப் பெறலாம்.  கதை, நெடுங்கதை, வாழ்க்கை வரலாறு, பயணக் குறிப்புகள் இந்தக் கணக்கில் சேரும்.  கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழியாக்கம் செய்த ஏழை படும் பாடு மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது.  அந்த ஆண்டுகளில் ஜீன்வால்ஜியின் நாடகம் நடக்காத கல்லூரிகளே இல்லை, பின்னர் திரைப்படமாகவும் வந்தது.

தேவதாஸ் முதலிய வங்கக் கதைகள் பெற்ற வெற்றிக்காக கதை தேடி கொல்கத்தா செல்லாத இயக்குநர்கள் இல்லை.  மொழிபெயர்ப்பு வெற்றி பெற்று மொழிகள் என்ற வேலிகளைத்தாண்டி “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்ற பாங்கு வளரவேண்டும். உலக மொழிபெயர்ப்பாளர்கள் கனவும் இதுதான்.

பேராசிரியர் கா.செல்லப்பன் வரைந்து காட்டும் கருத்துரை என்றும் நினைவு கூரத்தக்கது. “வாழ்க்கையே மொழிபெயர்ப்புத்தான். நினைவு, நிகழ்வின் மொழிபெயர்ப்பு, கனவு, நினைவின் மொழிபெயர்ப்பு.கவிதை கனவின் மொழிபெயர்ப்பென்பதும்.

மொழியாக்கம், அந்த மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு. நிழல்கள்தான் இலக்கியங்களில் நிஜங்களைக் காட்டுகின்றன. ஆழ்ந்து பார்த்தால், நிழல் நிஜமாவதையும், நிஜம் நிழலாவதையும் அறியலாம். ஒருவகையில், மூலமே மொழிபெயர்ப்புத்தான் என்பார் டெரிடர். மூலமே மொழியாக்கத்தில்தான் முழுமையடைகிறது”.

 

– ஔவை அருள்

இயக்குநர்,

மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *