BREAKING NEWS

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 14 பேர் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் மூத்த வீரர் கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு ஆகஸ்ட் மாதம் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, ஒருநாள் தொடர், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

இதில் மூத்த வீரர் கிறிஸ் கெயில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணியில் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற கெயில், உலகக்கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அதன்பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறுவதாக கெயில் தெரிவித்த நிலையில் இப்போது யுனிவர்ஸல் பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிறிஸ் கெயில் தற்போது மேற்கிந்தியத்தீவுகளுக்காக 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 338 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 அரைசதம், 25 சதங்கள் அடங்கும்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ் மேன்களில் லாரா 10 ஆயிரத்து 348 ரன்கள் குவித்து முன்னனியில் உள்ளார். இவரின் சாதனையை முறியடிக்க கெயிலுக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

அதேபோல, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான ரன்கள் குவித்த மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன்களில் லாரா 10,405 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க கெயிலுக்கு 13 ரன்கள் மட்டுமே தேவை அதை இந்த தொடரில் கெயில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் உலகக்கோப்பைப் போட்டியின் போது முழங்கால் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார்,அவரும் ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், டி20 போட்டிக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றாலும் கடைசி நேரத்தில் மட்டுமே தெரியும். மேலும், டேரன் பிராவோ, சுனில் அம்பரிஸ், சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்லெ நர்ஸ், வேகப்பந்துவீச்சாளர் கேப்ரியல் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை.

அதேசமயம், தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிலுடன் களமிறங்க இடதுகை பேட்ஸ்மேன் ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ஆல்ரவுண்டர் கீமோ பால் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 8ம் தேதி கயனாவில் முதல் ஒருநாள் ஆட்டமும், டிரினாடாடில் ஆகஸ்ட் 11 மற்றும் 14ம்தேதி 2வது 3வது போட்டிகள் நடைபெற உள்ளது.




Leave a Reply