BREAKING NEWS

மேட்டூர் அணை திறக்காததைக் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு.

மேட்டூர் அணை வரும் 12-ந் தேதி திறக்கப்படாததைக் கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தமிழக அரசு தண்ணீர் திறந்து விடும். இந்த நிலையில், இந்தாண்டும் வரும் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

தண்ணீர் திறக்கவில்லை

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நேற்று குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மேட்டூர் அணை 90 அடிக்கு மேல் இருந்தால்தான், அதனை திறக்க முடியும். ஆனால், நடப்பாண்டில் வெறும் 39.75 அடி மட்டுமே உள்ளதால், வழக்கமாக திறக்கப்படும் 12-ந் தேதி குறுவை சாகுபடி திட்டத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை திறக்க இயலாது என்றார். அதனைத் தொடர்ந்து, டெல்டா விவசாயிகளுக்கான `குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை’ அறிவித்தார்.

தி.மு.க. வெளிநடப்பு

இந்த அறிவிப்புக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சர் படித்த 110 அறிக்கையிலே விவாதம் கூடாது என உத்தரவு போட்டிருக்கிறீர்கள். இது ஏற்கனவே விதி முறையில் இருக்கக்கூடியது தான். அதை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், எதிர்க்கட்சி என்கிற முறையிலே மேட்டூர் அணையை ஜுன் 12ம் தேதி திறக்க முடியாத சூழலை இங்கே முதலமைச்சர் தெரிவித்திருக்கக் கூடிய காரணத்தால், அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்ற வகையிலே தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்கிறோம் என்று அறிவித்தார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

அவரைத் தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ தலைவர் ராமசாமியும், மேட்டூர் அணை திறக்கப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அவருடன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபூபக்கரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.




Leave a Reply