BREAKING NEWS

மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இதனால், விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கனமழை

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பெரும்பாலும் காவிரி பாசனத்தை நம்பியே உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்ததால் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லை. கர்நாடகாவிலும் போதியளவு மழை பெய்யாததால், அம்மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு மறுத்துவிட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு போதியளவு நீர்வரத்து இல்லாத காரணத்தால், திட்டமிட்டபடி கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த இருவாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷணராஜசாகர், கபினி அணை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வழிந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 3 லட்சம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனால், காவிரி தமிழகத்தை வந்தடையும் நுழைவுவாயிலான ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் சுமார் 10 அடியும், நேற்று சுமார் 13 அடியும் உயர்ந்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணை திறப்பு

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம். மேட்டூர் அணையை வழக்கமாக திறக்கும் நாளான ஜுன் 12ம் தேதி, போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாத நிலை ஏற்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கிவிட்டதாலும், நீர்வரத்தும் விநாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக இருப்பதாலும், அணையின் நீர் இருப்பு 62 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது என்பதையும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும், விவசாயிகளின் நீர்த் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி(இன்று) காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும், நானே நேரில் சென்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன். இதன் மூலம், காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Leave a Reply