தற்போதைய செய்திகள்

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள-ஜெயலலிதா நினைவிடத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் நீருற்று அலங்காரம். சி.எம்.டி.ஏ. அனுமதி…

சென்னை,

சென்னை, மெரினா கடற்கரையில் புதியதாக கட்டப்பட உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் நீரூற்று அலங்காரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சி.எம்.டி.ஏ. அனுமதி அளித்துள்ளது.

பிரம்மாண்ட நினைவிடம்

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவரது உடல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு அருகிலே அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாகவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபமும் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சி.எம்.டி.ஏ. ஒப்புதல்

இதனையடுத்து, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு ரூபாய் 50 ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இந்த கட்டுமான பணிக்கு ரூ.43.63 கோடிக்கு ஒப்பந்தம் கோரிய கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. நினைவிடத்திற்கான வரைபடம் மற்றும் கட்டுமான வடிவமைப்புகள் சி.எம்.டி.ஏ.விடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் இரண்டாம் நிலை பகுதிகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிர்ணயித்துள்ள வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்துக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. கட்டுமானம், பயன்பாட்டு திடகழிவுகள் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிகளை செய்ய வேண்டும். முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வனத்துறை வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கட்டிடம் கட்டுவது, சூழலியல் பாதுகாப்புக்கு உரிய விதியை ஒதுக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நீரூற்று அலங்காரம்

நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுகள் பூங்கா என 3 பிரிவுகளாக 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன.

பிரதான நினைவிட பகுதியின் கட்டுமான பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடியாக இருக்கும். இதன் உயரம் 45 அடி ஆகும். இங்கு 6 ஆயிரம் சதுர அடியில் நீரூற்று அலங்காரம் அமைக்கப்பட உள்ளது. பசுமை பரப்புக்காக 96 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்தாண்டு ஜெயலலிதா பிறந்தநாளுக்குள் அல்லது இந்தாண்டு அவரது நினைவு நாளுக்குள் முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply