BREAKING NEWS

மெரினாவில் துயில் கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி – துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

 

 

 

மூத்த தலைவர்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் தொடங்கியது.

முப்படை வீரர்கள் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அண்ணாசாலை, வலாஜா சாலை வழியாக, கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள், தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு சென்றது. வழியெங்கும் வாழ்த்து முழக்கங்களை இட்ட படி, கண்ணீருடன் தி.மு.க தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

ராணுவ வாகனம்

தி.மு.க தலைவர் கருணாநிதியை சுமந்து செல்லும் வாகனத்திற்கு பின்னால் ஸ்டாலின் நடந்து சென்றார். மாலை 6.15 மணியளவில், கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் அண்ணா நினைவிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெரினாவில் தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, மெரினாவில் காத்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, உள்பட தேசிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

தேசிய கொடி

மு.கருணாநிதியின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் எடுத்து மடித்து மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தேசியக் கொடியை பெற்றுக் கொண்டு அவர் சென்றதும், மு.க. அழகரி, ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, மருமகள் துர்கா, தமிழரசு என அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களது குடும்பத்தின் மூத்தத் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக க. அன்பழகனும், மு.க. ஸ்டாலினும் கருணாநிதி உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பிறகு அவரது உடல் சந்தனப் பேழையில் கிடத்தப்பட்டது. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறித்த சந்தனப் பேழையில் அந்த வாசகத்துக்கு சொந்தக்காரரரான கருணாநிதி கிடத்தப்பட்டார்.

பிரியா விடை

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமலும் கருணாநிதிக்கு பிரியா விடை கொடுக்க முடியாமலும் கலங்கி நின்றார் ஸ்டாலின். சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு இறுதி மரியாதை செய்தனர்.

அனைவரது கண்ணீர் தடுத்தும் முடியாமல் சந்தனப் பேழை மூடப்பட்டது. வாழ்க வாழ்க என்ற வாழ்த்து முழக்கத்துடன் பிரியாவிடை பெற்றார் கருணாநிதி.

நல்லடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில், அவரது சந்தனப் பேழை மெல்ல இறக்கப்படுகிறது. கூடியிருக்கும் மக்களின் கதறல் விண்ணை முட்டுகிறது. 21 குண்டுகள் முழங்க தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.




Leave a Reply