தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டக்களத்தில் நடந்த திடீர் திருமணம்….

சென்னை,

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் திடீர் திருமணம் நடைபெற்றது.

ஸ்டாலின் கைது

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

பின்னர், அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட மு.க.ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் கைது செய்தனர்.

தொண்டர்கள் குழப்பம்

பின்னர், அவர்கள் அனைவரையும் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். அவர்களுடன், போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது, திடீரென திருமண மண்டபத்துக்கு மணக்கோலத்தில் இருந்த தம்பதிகள் வந்தனர். அவர்களைப் பார்த்த தொண்டர்கள், போலீசார் திருமணம் நடைபெறும் மண்டபத்துக்கு நம்மை அழைத்து வந்துவிட்டனரோ என்று ஆச்சரியம் கலந்த குழப்பத்துடன் திகைத்து நின்றனர்.

திருமாவளவன் வேண்டுகோள்

அந்த மணமக்கள் நேரடியாக தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, திருமாவளவன் மு.க.ஸ்டாலின், இவர்கள் எனது கட்சித் தொண்டர்கள். பாரதிதாசன், மதி. இவர்களுக்கு என் தலைமையில் இன்று(நேற்று) திருமணம் நடப்பதாக இருந்தது.

ஆனால், போராட்டத்தில் கைதாகி நான் இங்கு வந்துவிட்டேன். ஆனாலும், என் தலைமையில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள் அதனால் இங்கு வந்துள்ளனர். நீங்கள் தான் அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின் தலைமையில் திருமணம்

அதைக்கேட்டு சிரித்த மு.க.ஸ்டாலின் அவர்களை அருகில் அழைத்தார். பின்னர், அனைவரும் வாழ்த்த மணமகன் பாரதிதாசன் கையில் தாலியைக் கொடுத்து மணமகள் மதி கழுத்தில் கட்டச் சொன்னார். தாலி கட்டியதும் மண்டபத்தில், அடைத்து வைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் அனைவரும் அவர்களுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், தம்பதியினருக்கு தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். காவிரி போராட்டத்துக்கு கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, திடீரென நடத்தி வைக்கப்பட்ட இந்த திருமணத்தால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Leave a Reply