தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம். குரங்கணி மலை தீ விபத்து ஏற்பட்டது எப்படி?விசாரணை அறிக்கை 2 மாதத்தில் தாக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விளக்கம்….

சென்னை,
குரங்கணி காட்டு தீ விபத்தில் 17 பேர் பலியானது எப்படி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் விளக்கமளித்து பேசினார்.

தி.மு.க.- காங்கிரஸ்

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் குரங்கணி தீவிபத்து குறித்து அரசின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு பேசினர்.
தனிப் பாதை

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசியதாவது:

தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் முதுவாக்குடி பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக சூழலியல் மேம்பாட்டுக் குழு அமைத்து, சமுதாயம் சார்ந்த சூழலியல் சுற்றுலா தொடங்க, 11.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 7 முதல் 10 அடி அகலம் கொண்ட ஒரு மலையேற்றப் பாதை அமைக்கப்பட்டது.

பழங்குடியினர் குழு

இந்த பாதை, போடியிலுள்ள கொட்டக்குடி காப்புக்காட்டில் உள்ளது. குரங்கணியில் தொடங்கும் இந்த மலையேற்றப் பாதை தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் உள்ள டாப் ஸ்டாப் வரை செல்கின்றது. இந்த வனப்பகுதியை நன்கு அறிந்த பழங்குடியினர், சூழலியல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகின்றனர்.
நுழைவுச் சீட்டு

சுற்றுலாப் பயணிகள் குரங்கணியிலிருந்து டாப் ஸ்டாப் வரை செல்வதற்கும், கேரளா மாநிலப் பகுதிகளிலிருந்து டாப் ஸ்டாப் வழியாக குரங்கணி வருவதற்கும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் வீதம் நுழைவுச் சீட்டு பெற்று செல்ல வேண்டும்.

10.3.2018 அன்று ஈரோடு மற்றும் திருப்பூரை சார்ந்த 12 நபர்கள் கொண்ட குழு ஒன்று, குரங்கணிக்கு வந்து டாப் ஸ்டாப் செல்வதற்கு 12 நுழைவுச் சீட்டுகள் பெற்று சென்றுள்ளனர். ஆனால், இக்குழு மலையேற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத குரங்கணியிலிருந்து கொட்டக்குடி காப்புக்காடு வழியாக, 7.1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு சென்று அன்று இரவு அந்த தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கியுள்ளனர்.

தங்க அனுமதியில்லை

இவர்கள் பெற்ற நுழைவுச்சீட்டு 10.3.2018 அன்று மட்டுமே செல்லத்தக்கதாகும். அன்று இரவே அந்த நுழைவுச்சீட்டு காலாவதி ஆகிவிட்டது. மேலும், இது போன்ற குழுக்கள் இப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

இக்குழுவினர், 11.3.2018 அன்று முன் அனுமதி ஏதுமின்றி, மலையேற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத பாதையின் வழியாக கொழுக்குமலையில் தனியார் தேயிலை தோட்டத்திலிருந்து, கொட்டக்குடி காப்புகாடு வழியாக குரங்கணிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
27 பேர் 

இதே போன்று, சென்னையிலிருந்து 27 நபர்கள் கொண்ட மற்றொரு குழு, சென்னை மலையேற்ற சங்கம் மூலமாக குரங்கணிக்கு 10.3.2018 அன்று வந்தடைந்தனர். அங்கிருந்து வனத் துறையினரிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், கொட்டக்குடி காப்புக்காடு வழியாக மலை ஏற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத பாதையில் கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு சென்று, அன்றிரவு அங்கு தங்கியுள்ளனர். இந்த தனியார் தேயிலைத்தோட்டம் ஓய்வு இல்லமாக செயல்படுவதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை.

எதிர்பாராத தீவிபத்து

இக்குழுவிலுள்ள 27 நபர்களில், மூன்று நபர்கள் கேரளாவிற்கு சென்று விட்டனர். மற்ற 24 நபர்கள், மலை ஏற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத வழிப்பாதை மூலம் கொட்டக்குடி காப்புக்காடு வழியாக 11.3.2018 அன்று மலை ஏற்றத்தை தொடங்கியுள்ளனர். இந்த இரண்டு குழுவினரும் 11.3.2018 அன்று கொழுக்குமலையிலிருந்து குரங்கணிக்கு செல்வதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை. இவ்வாறு வரும்பொழுது, எதிர்பாராத விதமாக அன்றைய தேதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

எச்சரிக்கை எதுவுமில்லை

இந்த இரண்டு குழுக்கள், 10.3.2018 அன்று குரங்கணியில் இருந்து கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு செல்லும்போது தீ ஏதுமில்லை. அது மட்டுமல்லாமல், களத்தின் தன்மையின் அடிப்படையிலும் மற்றும் இந்திய வன நிலஅளவை நிறுவன அறிக்கையின்படியும் கொட்டக்குடி காப்புக்காட்டில் கடைசியாக தீ நிகழ்வு ஏற்பட்ட நாள் 15.2.2018 ஆகும். இந்த தீ, வனத்துறையால் அணைக்கப்பட்டது. இந்த தீ அணைக்கப்படவில்லை என்றால், இந்திய வன நில அளவை நிறுவனத்திடமிருந்து தொடர் எச்சரிக்கை பெறப்பட்டு இருக்கும். கடந்த பல நாட்களில், இப்பகுதிகளில் தீ நிகழ்வு குறித்து எச்சரிக்கை எதுவும் அந்நிறுவனத்திடமிருந்து பெறப்படவில்லை.
வனத்துறையினர் பார்த்தனர்

வனத் துறை களப் பணியாளர்கள் தீ நிகழ்வு ஏற்பட்டதை 11.3.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் கண்டறிந்தனர். முத்துப்பாண்டி, வனக் காவலர் மற்றும் மூன்று சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீயினை அணைக்கும் பொருட்டு தீ நிகழ்வு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் இப்பகுதிக்கு மாலை சுமார் 5 மணி அளவில் சென்ற போதுதான், மலையேற்றக் குழுவினர் தீயில் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இதுமட்டுமல்லாமல், தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இதற்கிடையில், போடி வட்டத்தில் அணைக்கரைப்பட்டி பகுதியிலுள்ள சன்னியாசிபுரத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு அத்தீ விபத்து பற்றி தெரிய வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவருடன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த மகேந்திரன், உதவி வனப் பாதுகாவலர் மற்றும் இதர வனத் துறை களப் பணியாளர்களை தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அவர்கள் தீ விபத்து நடந்த பகுதிக்கு மாலை சுமார் 6.30 மணியளவில் சென்றனர்.
சம்பவ இடத்தில் துணை முதல்வர்

இந்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கு இணங்க துணை முதலமைச்சர், வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் குரங்கணிக்கு விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வந்தனர். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களைக் கோரியது. மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் 11.3.2018 அன்று இரவு முழுவதும் மேற்கொண்டது.

பலத்த தீக்காயம்

மலை ஏற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்களில், 10 நபர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். 17 நபர்களுக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டது. மீதம் 9 நபர்கள் சம்பவ இடத்தியேயே இறந்து விட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்புத் துறையின் ஹெலிகாப்டர்கள் மூலம் 12.3.2018 அன்று எடுத்து வரப்பட்டது. தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு, குரங்கணியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் தேனியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மிகவும் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் மதுரையிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நிஷா என்பவர் 12.3.2018 அன்று உயிரிழந்தார்.
சட்டப்படி நடவடிக்கை 

காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு, தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி 7 நபர்களும் இறந்துள்ளனர். இவர்களுக்கும், தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
தற்காலிக பணிநீக்கம்

குரங்கணிக்கு மலை ஏற்றம் செல்வதற்கு நுழைவுச் சீட்டு பெற்றிருந்தும், 12 நபர்கள் அங்கீகரிக்கப்படாத வேறு பாதையில் கொழுக்குமலைக்கு செல்வது தொடர்பான தகவல் ஜெயசிங், வனவருக்கு கிடைக்கப் பெற்றது என்பது வனத் துறையின் முதற்கட்ட விசாரணையின்போது தெரிய வந்தது. எனவே, அவர் 12.3.2018 அன்றே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விதிமீறல்கள்

அனுமதியின்றி 12 நபர்களை காப்புக்காடு பகுதிக்குள் அழைத்துச் சென்ற காரணத்தினால், போடி வட்டம், முந்தல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மீது தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விதி மீறல்களுக்கு, சென்னை மலையேற்ற சங்கம் மற்றும் ஈரோட்டில் உள்ள டூர் டீ இந்தியா ஆகிய நிறுவனங்களின் மீது காவல் துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
விசாரணை அதிகாரி

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு பரிந்துரைகளை வழங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 2 மாத காலங்களில் அவர் தனது அறிக்கையினை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் விளக்கமளித்தார்.

எண்ணெய் பதம் கொண்ட புற்கள்

‘‘தீ விபத்து நடந்த காட்டுப் பகுதியில், எண்ணெய் பதம் கொண்ட உயர்ந்து வளர்ந்த சுக்குநாரி புற்கள் அதிகம் இருந்ததால், தீ மிகவும் விரைவாக பரவியுள்ளது’’ என்று முதல்வர் விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.
Leave a Reply