BREAKING NEWS

முன்னாள் அமைச்சர் சத்தியமூாத்திக்கு 5 ஆண்டு சிறை.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சொத்துக்குவிப்பு

தமிழகத்தில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. பின்னர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடலாடி சத்தியமூர்த்தி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 83 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மேல் முறையீடு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி சொத்து குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதுபோல் சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.

இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று சத்தியமூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சரண்

ஆனால் இரு கோரிக்கைகளையும் ஏற்க நீதிபதி ெஜயசந்திரன் மறுத்து விட்டார். முதலில் ஆஜராகி பிறகு மேல்முறையீடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே சத்தியமூர்த்தியும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.கவில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கடலாடி சத்தியமூர்த்தி முதலில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்குக்கு பிறகு அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் வேறு முடிவை எடுத்தார்.

தேர்தல்

கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். மதுரையில் மு.க அழகிரியை சந்தித்து தி.மு.க வில் இணைந்த அவர் பிறகு தி.மு.கவின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க மேலிடம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் முருகனிடம் அவர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

என்றாலும் அவர் தி.மு.கவில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.




Leave a Reply