தற்போதைய செய்திகள்
anvar

முத்தலாக் மசோதாவுக்கு,நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு….

புதுடெல்லி,டிச.29-
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்தார்.
அ.தி.மு.க. எதிர்ப்பு
முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் நேற்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார்.

இதற்கு அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா முத்தலாக் மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே அ.தி.மு.க. எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவையில் அன்வர்ராஜா எம்.பி. கோரிக்கை வைத்தார். தொடர்ந்து முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர்ராஜா எம்.பி நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
சம உரிமை
இஸ்லாம் பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. யாரோ போராடி முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வாங்கித்தரும் நிலையில் அந்த பெண்கள் கிடையாது.
எந்த சமூக மாற்றங்கள் என்றாலும் அதே சமூகத்தினரிடமிருந்தே வர வேண்டும். உதாரணத்துக்கு, தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் தீமைகளை நமது முன்னோர்கள் சிந்தித்தார்கள். அதன் விளைவாக அந்த வழக்கங்களை நீக்கும் முயற்சியை அதே சமூகம் தான் முன் எடுத்தது. எனவே அது வெற்றி பெற்றுள்ளது.
முத்தலாக் விஷயத்திலும், தவறுகள் நடைபெறுமானால், முஸ்லிம் சட்ட வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். முத்தலாக் சட்டம் என்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. முத்தலாக் சட்டத்தால், இஸ்லாமிய பெண்களுக்கு தீமை தான். தலாக் செய்யும்போது ஒருமுறை கிடைக்கும் ‘செட்டில்மென்ட்’ பணமும் இதனால் கிடைக்காது.
முஸ்லிம் சட்ட வாரியத்தோடு மத்திய அரசு ஆலோசனை செய்ய வேண்டும். ஷரியத்துக்கு எதிராக, முஸ்லிம்களை தண்டிப்பதற்காக இந்த மசோதாவை நிறைவேற்றினால் முஸ்லிம் பெண்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.

தமிழக அரசு கடிதம்
இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள், ஆதரவற்றவர்களாக, தெருவில் பிச்சைக்காரர்களாக அலையும் நிலையை ஏற்படுத்தும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே சட்டமாக்க வேண்டும். அதனை கிரிமினல் குற்றமாக மாற்றுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சிறைத் தண்டனையை நீக்கி மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
பா.ஜ.க. தனது வகுப்புவாத அரசியலை செயல்படுத்த நினைக்கிறது. 3 முறை தலாக் கூறுவது தவறுதான். ஆனால் இதில் கிரிமினல் பிரச்சினை எங்கிருந்து வருகிறது? முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
இவ்வாறு அன்வர் ராஜா பேசினார்.
அதேபோல் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.




Leave a Reply