BREAKING NEWS

முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம்- ஓர் அலசல் 13 நாட்கள் சுற்றுப்பயணம்- ரூ.8,835 கோடி முதலீடு- 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு

வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்-அமைச்சர் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

ஏர் ஆம்புலன்ஸ்

கடந்த மாதம் 28-ந் தேதி லண்டன் சென்ற முதல்வர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனை நிபுணர்களைச் சந்தித்தார். பின்னர், அதன் கிளையை தமிழகத்தில் நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. பின்னர், சப்போக் நகரத்தில் உள்ள என்ஜென் நிறுவனத்தில் சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை பார்வையிட்டார்.

பின்னர் டெங்கு, மலேரியா கொசுக்களை கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்திடப்பட்டது. பின்னர், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளையும், அவர்கள் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், லண்டன் பாராளுமன்ற அரங்கில் இங்கிலாந்து எம்.பி.க்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

கால்நடைப்பூங்கா, யாதும் ஊரே

பின்னர், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு கடந்த 2-ந் தேதி சென்ற முதல்வர், அங்குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று, அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி உடைய கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலத்தில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், நாப்தா கிராக்கர்ஸ் யூனிட் உற்பத்தி தொழிற்சாலையினர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

டெஸ்லா கார்

பின்னர் சான்ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளிக்க அமெரிக்க தொழில் முனைவோர் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு, அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சான் ஹீசே நகரிலும், யாதும் ஊரே திட்டம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்திற்கு சென்று, மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் அழைப்பு விடுக்கப்பட்டது.

கழிவுநீர் சுத்திகரிப்பு முறை

பின்னர், அங்குள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தில் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாசில்லா எரிசக்தியை தயாரிப்பது குறித்தும், அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும், அந்நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 6-ந் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தை முதல்வர் பார்வையிட்டார். அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்தார்.

இதுபோன்று, கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், தமிழ்நாட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

ரூ.8,835 கோடி

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர், கடந்த 9-ந் தேதி துபாய் நாட்டிற்கு சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் “வர்த்தக தலைவர்கள் அமைப்பு” என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 10,800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பின்னர், துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணத்தின் மூலம், மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளுக்கு, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.




Leave a Reply