தற்போதைய செய்திகள்

முதல்வராக எடியூரப்பா நாளை பதவி ஏற்பு.

முதல்வராக எடியூரப்பா நாளை பதவி ஏற்பு.


27-ந் தேதிக்கு பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவு
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் திடீர் அழைப்பு
பெங்களூரு, மே.16-

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்துவரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுடன் ஆளுநர் வஜுபாய் வாலாவை நேற்று மீண்டும் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கிடையில், முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்க கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் 27-ந் தேதி பெரும்பான்மையை நிருபிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

அதன்படி, நேற்று முன்தினம் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தங்களுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் (காங்கிரஸ்-78, ம.த.ஜ.-38 மற்றும் இரு சுயேச்சைகள்) ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

உரிமை கோரிய பா.ஜ.க

அவருக்கு முன்பாக, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் 104 இடங்களில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என, எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோரி இருந்தார்.

ஆனால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்து ஆளுநர் உடனடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், எடியூரப்பா நேற்று காலை மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இதற்கிடையில் நேற்று, காங்கிரஸ் மற்றும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடந்தது. ம.ஜ.த. கூட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

இதே போல் காங்கிரஸ் கூட்டத்திலும் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என, உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகி இருந்தது.

அமைச்சர் பதவி

அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா கட்சி ரூ.100 கோடியுடன் அமைச்சர் பதவியும் தருவதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக, பரபரப்பான குற்றச்சாட்டை குமாரசாமி முன்வைத்தார்.

இதற்கிடையில், ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் நீண்ட தொலைவில் இருந்து வருவதால் தாமதம் ஏற்பட்டதாகவும், தாங்கள் குமாரசாமி அண்ணாவுடன்தான் இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

குமாரசாமி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், குமாரசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா இருவரும் நேற்று மாலை மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து, நிருபர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். இரு தரப்பையும் சந்திக்க அவருக்கு உரிமை உள்ளது.

நிலையான அரசை அமைக்கும் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினோம். சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முன்னதாக, பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவும் நேற்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார்.

முதல்வரா பதவி ஏற்பு

இதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக பெங்களூரு மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 27-ந் தேதிக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஒரு எம்.எல்.ஏ

இந்த நிலையில் நேற்று ராணிபென்னூர் தொகுதி எம்.எல்.ஏ சங்கர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மொத்தம் 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறிய பா.ஜ.கவின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா அதற்கான கடிதத்தை நேற்று ஆளுநரிடம் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, ஆட்சியமைக்க பா.ஜ.கவுக்கு அழைப்புவிடுக்குமாறு, ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தேன். கூடிய விரைவில் எங்கள் கோரிக்கை மீது முடிவெடுக்க கோரினேன் என்றார். ஆளுநரை சந்தித்த பிறகு எடியூரப்பா முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ரொம்பவே ரிலாக்சாக காணப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான நேற்று முன்தினம் டென்ஷனாக காணப்பட்ட எடியூரப்பா முகத்தில் நேற்று புன்னகை ததும்பியது.

பதவியேற்பு

இதனிடையே பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என்றும், இந்த தகவல் தெரிந்தே எடியூரப்பா மகிழ்ச்சியாக காணப்படுகிறார் என்றும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, இன்று காலை 9,30 மணிக்கு எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் கர்நாடக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டரில் ‘வி’ வடிவ வெற்றி விரல் (பாக்ஸ்)

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து உள்ளார். இன்று காலை 9:30 மணியளவில் பா. ஜனதா அரசு பதவியேற்கிறது என கர்நாடகா மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

இதேபோன்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று 9:30 மணி அளவில் எடியூரப்பா பதவி ஏற்கிறார் என குறுப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பா. ஜனதா மற்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் இருந்து இதுதொடர்பான செய்திகள் எடுத்துவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா? என்று கேட்ட கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை கர்நாடக பா.ஜ.க பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் காண்பித்தார். இதன் மூலம் இன்று கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி பதிவயேற்பது உறுதியாகி உள்ளது.

—-
Leave a Reply