BREAKING NEWS

முக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.


 

 

தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

பொதுக்கூட்டம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நீட் தேர்வை ஏன் பல மாநில முதல்வர்கள் எதிர்க்கவில்லை என கேட்டபோது அவர்கள் கூறுகையில் எங்கள் மாநிலத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. எனவே நீட் தேர்வு வந்தால் எங்கள் மாநில பிள்ளைகள் உங்கள் மாநிலத்தில் படிப்பார்கள் என்றனர்.

விவசாயம்

8 வழிச்சாலை தொடர்பான அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும். இந்த திட்டத்தால் எவ்வளவு பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும் என்ற நிலையை இந்த அரசு உணரவில்லை. இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களை சந்திக்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அரசு கைது செய்து அடக்குமுறையை கையாளுகின்றது.

ஒரு திட்டத்தை கொண்டு வரும் முன்னர் அது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதனை செயல்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை குறித்து தெளிவான அறிக்கை இல்லை. விரைவில் தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினரும் தமிழகத்தில் தீவிரவாதம் தோன்றியிருப்பதாகவே பேசுகின்றனர். ஆட்சி பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு யார் தீவிரவாதி, சமூக விரோதி என்று தெரியவில்லையா? அதனை யார்? யார்? என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் தான் தீவிரவாதம் என்பேன்.

தமிழகத்தில் தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு அடக்குமுறையில் ஈடுபடுவதுடன், மக்களை அச்சத்திற்குள்ளாக்குகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply