BREAKING NEWS

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

புதுக்கோட்டையில், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதேபோல டபுள் டிராப் பெண்கள் பிரிவில் புவனா ஸ்ரீ 60 தோட்டாக்களுக்கு 27 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

மாநில அளவிலான இந்த போட்டியில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதேபோல ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தட்டிச் சென்றது. மிக்ஸடு பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சென்னை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தேசிய வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.




Leave a Reply