BREAKING NEWS

மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சிக்கிய மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆள் மாறாட்டம் புகார்

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். இவரது மகன் உதித் சூர்யா (21). இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

உதித் சூர்யா படிப்பைத் தொடர்ந்த நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் வந்தது. இதுகுறித்த தகவல் போலீசாருக்கும் கிடைத்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ ப்படிப்பில் சேர்ந்தது உறுதியானது.

முன் ஜாமீன் கோரி மனு

இந்தப் புகார் எழுந்தவுடன் உதித் சூர்யா மன உளைச்சலாக இருக்கிறது என கல்லூரியிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித் சூர்யாவை விசாரிக்க தனிப்படை போலீசார் சென்னைக்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என்று அவருடைய வழக்கறிஞர்களிடம் வினவினார். மேலும், இதற்கான சாத்தியத்தை மாணவர் தரப்பிடமே கேட்டுத் தெரிவிக்கும்படி வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

மேலும், உதித் சூர்யா வழக்கு முழுமையாக எப்போது சிபிசிஐடியின் வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, நேற்று முன் தினம் (திங்கள்கிழமை) தலைமறைவாகியுள்ள மாணவர் உதித் சூர்யா வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *