BREAKING NEWS

மழைக்கால நோய்களிலிருந்து காத்துக்கொள்வது எப்படி?

இது வடகிழக்கு பருவமழைக்காலம். தென்மேற்கு பருவமழையைப் போல தொடக்கத்தில் பொய்த்தாலும் அதன்பிறகு ஓரளவு பெய்கிறது. சில நேரங்களில் பகல் முழுவதும் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது. வானிலையில் ஏற்படும் சில மாற்றங்களின் காரணமாகவும் வெப்பச்சலனம் உள்ளிட்ட சில காரணங்களாலும் மழை பெய்கிறது. இடையிடையே குறைந்த காற்றழுத்தம், புயல் உருவாகி மழை பெய்கிறது.

யூகலிப்டஸ்… நொச்சி… மஞ்சணத்தி…

சமீப காலமாக பெய்துவரும் மழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதுடன் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஆகவே, இத்தகைய சூழலில் நோய் பாதிக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுவதால் கூடியவரை நாம் குடிக்கும், குளிக்கும் நீர் சூடாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், இருமல், ஜலதோஷம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் யூகலிப்டஸ் இலை, நொச்சி இலை போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளியுங்கள். உடல்வலி இருந்தால் இவற்றுடன் நுணா (மஞ்சணத்தி) இலையைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குளியுங்கள்.

மிளகு… ஆடாதொடை… ஓமம்…

தலையை நன்றாக உலர்த்திவிட்டு சாம்பிராணி புகை காட்டலாம். சாம்பிராணி புகையை மூக்கால் சுவாசிக்காமல் உச்சந்தலை, பின்னந்தலை படுமாறு காட்டுங்கள். இதேபோல் தலைக்குக் குளித்ததும் தலையை உலர்த்திவிட்டு மிளகுத்தூளை மெல்லிய பருத்தித் துணியில் வைத்து உச்சந்தலையில் சூடு பறக்க தேய்த்துவிடுங்கள். ஓமத்தை லேசாக வறுத்துப் பொடியாக்கி அதனுடன் கற்பூரம் சேர்த்து மூக்கால் சுவாசியுங்கள். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நெஞ்சு, விலாப்பகுதியில் பொறுக்கும் சூட்டில் தேய்த்தால் சளித்தொல்லைகள் விலகும். ஆடாதொடை இலைகள் ஒன்றிரண்டு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் சளித்தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இஞ்சி… துளசி… தூதுவளை… பூண்டு… மஞ்சள்… பசும்பால்..

மேலும், நாம் உண்ணும் உணவில் தொடங்கி அனைத்துமே சூடானதாக இருந்தால் மிகவும் நல்லது, காலையில் அருந்தும் தேநீரில் இஞ்சி, துளசியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சித்துவையல், தூதுவளைச் சட்னி, சுக்கு காபி, கற்பூரவல்லி பஜ்ஜி, கல்யாண முருங்கை வடை என அனைத்துமே சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும் சிற்றுண்டிகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இரவில் உறங்குவதற்குமுன் பூண்டுப்பால் அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு நபருக்கு பூண்டுப்பால் செய்ய 10 பூண்டுப்பல் உறித்து 50 மில்லிப்பாலுடன் அதே அளவு நீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து இறக்க வேண்டும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் சளித்தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இரவில் தூங்கும்போது தலையணை உறைக்குள் நொச்சி இலைகளை வைத்து தூங்கினால் சுவாசம் சீராகி மூக்கடைப்பு விலகும்; தலைபாரம், தலைவலி விலகும். ஜலதோஷம், சளி சரியாகும்.

இம்பூரல்… மிளகு… வல்லாரை… நல்லெண்ணெய்…

இருமல், சளி பாதிப்புகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இம்பூரல் என்னும் களைச்செடி நல்ல மருந்தாகும். சிலர் இடைவிடாமல் தொடர்ந்து இருமிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இம்பூரல் வேர்ப்பட்டையுடன் மிளகுப்பொடி சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரையாக உருட்டி இரண்டு மாத்திரை வீதம் காலை, மாலை எனச் சாப்பிட்டு வந்தால் இடைவிடாத இருமல் குணமாகும். இம்பூரல் முழுச்செடியையும் காய வைத்துப் பொடியாக்கி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் குத்திருமல், வறட்டு இருமல் என எந்தமாதிரியான இருமலும் குணமாகும்.

இம்பூரல், வல்லாரை தலா 40 கிராம் அளவு எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியாகக் காய்ச்ச வேண்டும். அதில் இரண்டு டீஸ்பூன் வீதம் காலை, மாலை குடித்து வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். புழுங்கலரிசியை ஊற வைத்து இம்பூரல் வேர்ப்பட்டை, மிளகு சேர்த்து மையாக அரைக்க வேண்டும். அதை நல்லெண்ணெயில் போட்டு அடை போல செய்து சுடச்சுட சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, நெஞ்சுச்சளி, தலைபாரம். டி.பி எனப்படும் காசநோய் சரியாகும். உப்பு சேர்க்காமல் செய்த இந்த அடையை காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் பிரச்னைகள் தீரும்.

இம்பூரல்… முசுமுசுக்கை… கல்யாண முருங்கை…

இம்பூரல் இலை, முசுமுசுக்கை இலை, கல்யாண முருங்கை இலை போன்றவற்றை ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் சேர்த்து அரைத்து அடை அல்லது தோசை செய்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பக்கட்ட காச நோய் (டி.பி) குணமாகும். இம்பூரல் இலையுடன் இரண்டு பங்கு அரிசிமாவுடன் சேர்த்து அடை போலச் செய்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு, ஈளை போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் சரியாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த பருவகாலம் பெருந்தொல்லையாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வந்த நோயிலிருந்து நிவாரணம் பெறவும், அவதிகளிலிருந்து காத்துக்கொள்ளவும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பீனிசம் எனப்படும் சைனஸ் பிரச்சினையால் மூக்கடைப்பு, தும்மல், நீரொழுக்கு போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் நொச்சி இலையை இரவில் தலையணையில் வைத்து உறங்குவது, நொச்சி இலையை ஆவி பிடிப்பது (வேது பிடித்தல்) போன்றவற்றால் சீரான சுவாசம் பெறலாம். இதேபோல் நல்லெண்ணெயில் நொச்சி இலைகளைப்போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிப்பதால் நிவாரணம் கிடைக்கும். தும்பைப்பூவின் சாறு இரண்டு அல்லது மூன்று சொட்டு மூக்கில் விடுவதால் குணம் பெறலாம். முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்துக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளிப்பதாலும் சைனஸ் சரியாகும். இதே முசுமுசுக்கை இலையை அரிசி மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தாலும் சைனஸ் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

ஆஸ்துமாவை விரட்டும் சங்கு இலை…

ஆஸ்துமா நோயாளிகள் சங்கு இலையை துவையல் செய்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.முசுமுசுக்கை இலையை அரிசி மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வருவது, இலையை நெய்விட்டு வதக்கி மதிய உணவுடன் சாப்பிடுவது அல்லது துவையல் செய்து சாப்பிடுவது போன்றவற்றாலும் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம். வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறு, முருங்கைப்பட்டைச்சாறு போன்றவற்றை தனித்தனியாகவோ, கலந்தோ சாப்பிடுவதால் ஆஸ்துமா அவதி குறையும்.

மருதாணி… மஞ்சள்… மாசிக்காய்… கடுக்காய்…

அடுத்ததாக மழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நீரால் சேறும், சகதியுமாகக் கிடக்கும். அதை காலால் மிதித்தபடி நடப்பதால் சேற்றுப்புண் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதை இயற்கை மூலிகைகளின்மூலம் மிக எளிதாகக் குணப்படுத்தலாம். மருதாணி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அந்த இடத்தில் பற்று போடுவதன்மூலமோ, மருதாணியுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசி வருவதன்மூலமோ குணம் பெறலாம். வேப்ப எண்ணெயை சூடுபடுத்தி வெதுவெதுப்பான சூட்டில் சேற்றுப்புண்ணின்மீது தடவி வரலாம்.  மாசிக்காயை அரைத்து பற்று போடுவது, கடுக்காயை நீர் சேர்த்து கொதிக்கவைத்து  சூடு ஆறியதும் சேற்றுப்புண்ணின்மீது ஊற்றுவதும் பலன் தரும். மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து கலந்து பூசினாலும் சேற்றுப்புண்  குணமாகும்.

கொத்தமல்லி…. சாரணைக்கீரை… அம்மான் பச்சரிசி…

கொத்தமல்லிக்கீரை, சாரணைக்கீரை போன்றவற்றைச் சாப்பிட்டு வருவதன்மூலம் உள் ரணம் ஆறும். அம்மான் பச்சரிசி என்ற ஒரு மூலிகை சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் தானாக வளர்ந்து கிடக்கும். இதை வெறுமனே அரைத்து சேற்றுப்புண்களின்மீது பற்று போட்டாலும் புண்கள் குணமாகும். இதே இலையை மையாக அரைத்து கால் ஆணி உள்ளவர்களுக்கு பூசி வந்தாலும் குணம் கிடைக்கும். கானா வாழை என்ற கீரைச்செடியை அரைத்த பற்று போடுவதன்மூலமும் சேற்றுப்புண் ஆறும். மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கடுக்காய், நாயுருவி இலை போன்றவற்றையும் அரைத்து சேற்றுப்புண்களின்மீது  தடவி வருவதன்மூலம் சேற்றுப்புண்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

– எம்.மரிய பெல்சின்,

மூலிகை ஆராய்ச்சியாளர்,

தொடர்புக்கு: jonussterbi@gmail.com

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *