BREAKING NEWS

மல்லையாவுக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகை, ரூ.9 ஆயிரம் கோடி சொத்தை பறிமுதல் ஆகிறது – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை.

 

பண மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் அவரின் ரூ.9 ஆயிரத்துக்கும் அதிகமான சொத்தை பறிமுதல் செய்யவும் திட்டமிடப்படப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மோசடி மன்னன்

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுகளுக்கு இடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.6,027 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது.

அவசர சட்டம்

இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை வாங்கிய கடனை பல்வேறு போலி கம்பெனிகளில் விஜய் மல்லையாவின் கிங் பி‌ஷர் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

அண்மையில் மத்திய அரசு தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் 20ந் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.

ரூ.9 ஆயிரம் கோடி பறிமுதல்?

இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை மல்லையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

———–




Leave a Reply