தற்போதைய செய்திகள்

மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் முயற்சி தீவிரம் ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்தன: 15 மாணவிகள் தீ காயத்துடன் மீட்பு…

தேனி,

போடி அருகே குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்படர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 15 மாணவிகள் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

மலை ஏற்றம்

தேனி மாவட்டம், போடி அருகே இருக்கும் குரங்கணி மலைப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இந்த மாலையில் கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு மலையில் முகாம் அமைத்து தங்கினர். நேற்று 2வது நாளாக மாணவிகள் மலை ஏற்ற பயிற்சியை மேற்கொண்டனர், கோடை காலம் என்பதால், போடி, பெரியகுளம், குரங்கனி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மாலை நேரங்களில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

காட்டுத்தீ

இந்தநிலையில் நேற்று மாலையில் மாணவிகள் தங்கியிருந்த மலைப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. முதலில் சிறிய அளவில் இருந்து தீயை மாணவிகள் அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகத்தால் தீ நான்கு புறமும் வேகமாக பரவியது தீயின் வெப்பம் தாங்க முடியாத மாணவிகள் அலறி துடித்தனர். மேலும் இது குறித்து செல்போன் மூலம் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் அளித்தனர்.

காட்டு தீயில் மாணவிகள் சிக்கிய சம்பவம் மலை கிராம மக்களை அதிர்ச்சியை உறைய வைத்தது. உடனடியாக கிராம மக்கள், போடி, தேனி, உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், போலீசார் என 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், தேனி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் தீ எரியும் மலைப்பகுதிக்கு விரைந்தனர்.

முதல்-அமைச்சர்

குரங்கணி கிராம மக்கள், போடியைச் சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைப்பகுதிச் சென்று மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் தொடங்கி மலை பகுதியில் இருள் சூழ்ந்து கொண்டதால் மீட்பு பணியில் தேய்வு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு காட்டு தீயில் சிக்கி கொண்ட மாணவிகளை மீட்க விமானப்படையின் உதவியை கேட்டார்.

ஹெலிகாப்டர்கள்

மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்புவதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து விமான படை ஹெலிகாப்டர்கள் வீரர்களுடன் தேனி விரைந்து வந்தது. விமான படை வீரர்கள் ரசாயனங்களை தூவி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தீயில் சிக்கிய 15 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர், சிறு தீ காயம் அடைந்து இருந்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவிகள் தீயில் சிக்கிய தகவல் அறிந்த அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், பொதுமக்கள் மலை பகுதியில் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

துணை முதல்வர் விரைவு (பாக்ஸ்)

தேனி மாவட்டத்தில் தீ விபத்து பாதித்த இடத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்தனர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாணவிகளை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

நிர்மலா சீதாராமன் உத்தரவு (பாக்ஸ்)

குரங்கிணி காட்டுத்தீ குறித்து தேனி மாவட்ட ஆட்சியாளருடன் தொலைபேசி மூலம் பேசியதாக நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் 10-15 மாணவர்கள் மலையின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார். காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள், சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.
Leave a Reply