தற்போதைய செய்திகள்

மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
ஏற்காட்டில் நாளை கோடை விழா
ஏற்காடு,கோடை விழாவின் தொடக்க நாளான நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.கோடை விழாஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற நாளை (12-ந் தேதி) தொடங்கி 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறை மற்றும் மற்ற துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மலர் கண்காட்சி

மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். இதில் சால்வியா, மேரிகோல்டு, வின்கா, தினியா, பிரான்சி, மெடானியா, டேலியா, ஜெரியா, காஸ்மாஸ், ஜெர்பேரா, ரோஜா போன்ற ரக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இது தவிர மலர் கண்காட்சிக்காக ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விதவிதமான ரோஜா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கோடை விழாவின் தொடக்க நாளான நாளை (12-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

சீரமைப்பு

இதையட்டி ஏற்காடு செல்லும் மலை சாலை தூய்மை படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடு போடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலை பாதைகளில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் கொண்டைஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணாப்பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர்

ஏற்காட்டிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர இருப்பதாலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் 50 சிறப்பு பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Leave a Reply