தற்போதைய செய்திகள்
large_sahitya-akademi-award--38038

மறைந்த கவிஞர் இன்குலாப், கவிஞர் யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு…

புதுடெல்லி, டிச. 22-
மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது., ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற மலையாள மொழி நூலை மொழிபெயர்த்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மறைந்த கவிஞர் இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது என்பதாகும். கடவுள் மறுப்பாளரான இவர் பொதுவுடைமை சிந்தாத்த வாதியாக இருந்தார். அவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். மேலும் நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். தெளிந்த அரசியல் பார்வையும் அடர்த்திய இலக்கிய ஆளுமையும் இவரது கவிதைகளின் பலம்.
போராட்டம்
விருதுக்கு தேர்வாகியுள்ள ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலை சென்ற ஆண்டு அகரம் பதிப்பம் வெளியிட்டுள்ளது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஔவை, மணிமேகலை உள்ளிட்ட 6 நாடகங்களும் எழுதி மேடையேற்றியுள்ளார். அவையும் நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும் 1 சிறுகதைத் தொகுப்பும் 2 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் மரணமடைந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் தேசிய விடுதலை ஆகியவை குறித்து பல கட்டுரைகள், கவிதைகளை இயற்றியுள்ளார்.
மொழிபெயர்ப்பு விருது
யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து என்பதாகும். நுண்கலையில் பட்டம் பெற்றுள்ள இவர் பல கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். யூமா வாசுகி தனது ‘ரத்த உறவு’ நாவல்மூலம் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமானவர். யூமா வாசுகி கவிஞராகவும் அறியப்படுகிறவர். இவர் சிறந்த ஓவியரும்கூட. குதிரைவீரன் பயணம் இவர் நடத்திவரும் இலக்கிய இதழ்.
யூமா வாசுகி பல ஆண்டுகளாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி.விஜயன் எழுதிய இந்நூல் யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.




Leave a Reply