BREAKING NEWS

மருத்துவ படிப்புக்கு  பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

 

 

 


சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்-2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நேற்று) சென்னை கோட்டையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்-2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் மத்திய அரசு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

கொள்கை முடிவு

மாநில அரசின் கொள்கை ரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக, நீட் தேர்வை இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்பொழுதுள்ள இந்திய மருத்துவ முறை மத்திய குழு சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையும் கருத்தில் கொண்டு, முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லூரிகளில், பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

துணை முதல்வர் -அமைச்சர்கள்

இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் (பொறுப்பு) கே.செந்தில்ராஜ், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், சட்டத் துறை செயலாளர் சு.ச.பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply