தற்போதைய செய்திகள்
jjaya copy

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த போதிலும் காவிரி பிரச்சினை குறித்து ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் வாக்குமூலம்…..

சென்னை,
மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த போது, காவிரி தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான வாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் என்று முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
ஆனால், அடுத்தடுத்து அவரது உடல்நிலை மிக மோசமானது. டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜெயலலிதா மறைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோதே பல்வேறு கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாதது குறித்து கேள்வி எழுப்பினர். அவரது மரணத்துக்குப் பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றனர்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் கேட்டு வந்தனர். இந்த விவகாரத்திற்கு உரமூட்டும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. ஆனாலும் அவர் நலமுடன் உள்ளார். சாப்பிடுகிறார் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று பேசினார்.
விசாரணை ஆணையம்
இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற பேச்சுகள் மீண்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் சேப்பாக்கம் எழிலகம் கலச மகால் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் இதுவரை சசிகலா தரப்பினர், ஜெயலலிதாவின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் என பலரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ராம மோகன ராவ் ஆஜர்
இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி நேற்று வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், காவிரி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா 2 மணி நேரம் ஆலோசனைகளை வழங்கியதாக கூறினார்.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த ராம மோகன ராவ், நிருபர்களிடம் கூறியதாவது:-
“கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற காவிரி ஆலோசனைக் கூட்டம் குறித்து விசாரணை ஆணையத்தில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பதிலளித்தேன்.
பேட்டி
கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ந் தேதியன்று மாலை 4 மணிமுதல் 6 மணி வரை ஜெயலலிதா காவிரி வழக்கு குறித்து எனக்கு ஆலோசனை வழங்கினார். காவிரியை எப்படி காப்பாற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்க வைக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் கூறினார்.
ஜெயலலிதா காவிரிக்காகவே வாழ்ந்தார், தமிழகத்திற்காக வாழ்ந்தார். செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் நான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்தேன்”
இவ்வாறு ராம மோகன ராவ் கூறினார்.
Leave a Reply