BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 6 “வாயைத் திற சர்க்கரையைப் போடுகிறேன்..!’’

எண்ணற்ற பலரது இதயங்களில் இன்றும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் மன்னாதி மன்னனுக்கு மற்றவர்களிடம் எவ்வளவு மதிப்பிருந்தது என்று நிச்சயம் சொல்லத்தான் வேண்டும். நான் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையின் செயலாளராக இருந்தபோது, இசைக்கல்லூரி என் பொறுப்பில் இருந்தது. அந்த இசைக்கல்லூரியின் முதல்வராக, திரைப்படங்களில் புகழ் வாய்ந்திருந்த, நடிகை பானுமதி அமர்த்தப்பட்டிருந்தார். அதற்கடுத்த நிலையான இயக்குநர் பொறுப்பில், இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் இருந்தார். அவருடைய தமிழ்ப் பற்றும், தமிழ்ப் பாடலும் புகழும் நாடறிந்தது. வயதாகி, உடல் தளர்ந்ததனால், நிலைதடுமாறி, சில சமயங்களில் அவர் பேசுவார். அதைப் பார்த்து, அவரை எப்படியாவது பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முயன்று, இந்த அம்மையார் சொன்னதால், உடனே எடுத்து விட்டார்கள். நான் எவ்வளவோ சொன்னேன்.

இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் மீது, எனக்கு அளப்பரிய ஆர்வம். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்பதற்குக் காரணம் உண்டு. அரசு செயலாளர் என்ற முறையில், எல்லாத் துறைத் தலைவர்களையும் அழைத்து, நிதி ஒதுக்கீடு பற்றிய ஒரு கூட்டம் நடக்கும். அப்போது நான் ஊரில் இல்லை. நான் சார்ந்த துறையின் இணைச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர், அப்போதிருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்த அதிகாரிகள், ஒரு கடிதத்தை, வழக்கம் போல எல்லோருக்கும் அனுப்பி விட்டனர். அதற்கடுத்த நாள் காலை நடந்த கூட்டத்தில், நான் பங்குகொண்டேன். இசைக்கல்லூரியில் இருந்து யாரும் வரவில்லை. அது ஒன்றும் பெரிதில்லை. நான் தொகையை ஒதுக்கிவிட்டு, அந்த அம்மையாருக்குச் சொல்லிவிடலாம் என்று அந்த அதிகாரிகளிடம் சொன்னேன். திடீரென்று அன்று மாலை 4 மணிக்கு, முதலமைச்சர் எம்ஜிஆர் அழைத்தார்.

“என்ன? நீங்கள் பானுமதிக்குக் கடிதம் அனுப்பி, கூட்டத்திற்கு அழைத்தீர்களாமே?” என்று கேட்டார்.

“நான் ஒன்றும் அழைக்கவில்லை. இயக்குநர்களை அழைப்பது வழக்கமானதுதான்” என்றேன் நான்.

“இல்லையில்லை. அந்தம்மா பெரிய முன்கோபி, அவரைப் பார்ப்பதென்றால், நீங்கள் போய்ப் பார்த்து விடுங்கள். அவரைக் கோட்டைக்கு வருமாறு சொல்லாதீர்கள்.” என்றார் எம்ஜிஆர்.

நான் சொன்னேன். “கடிதம்கூட, நான் எழுதவில்லை. இணைச் செயலாளர் நடத்திய கூட்டம் அது” என்று மெல்லச் சொன்னேன்.

முதலமைச்சர் எம்ஜிஆருக்கு, தன்னுடைய திரைப்படத் துறையில் பங்குபெற்றவர்கள் பற்றிய மதிப்பு எப்போதுமே சற்று கூடுதலாக இருக்கும்.

“அதற்கென்ன அண்ணா! நான்போய்ப் பார்த்துவிடுகிறேன்” என்றேன் நான்.

பிறகு, நான் போய்ப் பானுமதியைப் பார்த்தேன். அவருக்கும் என்னை நன்றாகத் தெரிந்திருந்தது. வரன்முறைகள் பற்றி அம்மையாருக்குத் தெரியாத காரணத்தினால், அந்தச் சிக்கல் வந்தது. ஒரு முறை தன் மகனைக் காண்பதற்காக, அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்தார் பானுமதி அம்மையார் அங்கே போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து விட்டு வந்தார். அதன் பிறகு பார்த்தால், தொலைபேசிச் செலவு பெரும் அளவில் வந்துவிட்டது. அமெரிக்காவில் இருந்து இங்குள்ளவர்களுக்குப் பேசினாலும், அந்தப் பணத்தை இங்கே செலுத்த வேண்டிய முறைக்கு, அவர் கடிதம் தந்திருந்தார். இந்தக் கோப்பு நிதித்துறைக்குச் சென்றபோது, அதனை மறுத்து விட்டார்கள். இந்தப் பணத்தை, நீங்கள் எப்படியாவது பெற்றுச் செலுத்த வேண்டும். இந்த மாதிரி எவருக்கும் இசைவு தர முடியாது என்று கடிதம் வந்தது. என்னுடைய துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இது பற்றிப் பானுமதிக்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தின் படியை, நான் கையில் வைத்திருந்தேன். அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்த நாளில், அந்தப் படியைக் கையிலெடுத்துக்கொண்டு, முதல்வரைச் சந்தித்தேன்.

“இந்தப் பணத்தை, அவரைக் கட்டச் சொல்கிறார்கள். இந்த மாதிரி கடிதம் போயிருக்கிறது. நாளைக்கு உங்களிடத்தில் அதைப் பற்றிக் குறைவாகச் சொல்வார்கள் “ என்று நான் கூறினேன்.

“வாயைத் திற சர்க்கரையைப் போடுகிறேன்” என்று சொன்னார் எம்ஜிஆர்.

என்னவென்று கேட்டேன் நான். ஏற்கெனவே அந்தம்மா நீண்ட குறை சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி விட்டு, “அந்தப்பணம் எவ்வளவு?” என்று கேட்டார் எம்ஜிஆர். அந்தப் பணத்தை, அவரே கட்டி விட்டார்.

முதலமைச்சரைப் பற்றி, ஒன்று சொல்ல வேண்டும். உடல்நலம் சரியில்லாத நிலையிலும், எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், நாட்டுப்பண் பாடி முடியும் வரை, அவர் அங்கிருந்து போக மாட்டார். அது அவருக்கு வழக்கமாக இருந்தது. ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் இங்கே நினைவூட்டலாகப் பதிவிடுகிறேன்.

மாமன்னன் இராசராசனுக்கு ஆயிரம் ஆண்டு முடிசூட்டு விழா என்று, தஞ்சையில் மகத்தான விழா நடந்தது. அதற்குத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அம்மையார் வந்திருந்தார். அந்த விழாவை மேற்பார்வையிடுவதற்காக, அப்போதைய முதற்செயலாளர் பத்மநாபன் வந்திருந்தார். என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகினார் பத்மநாபன்.

இந்திராகாந்தி அம்மையார் சொற்பொழிவாற்றும்போது, யார் மொழிபெயர்ப்பது என்று யோசித்து, என்னை அழைத்தார். நான் மொழிபெயர்த்து, அம்மையாரின் பேச்சு முடிந்தது. இந்திராகாந்தி அம்மையார் அவருக்கே உரிய வேகத்தில் விடுவிடுவென்று கீழிறங்கி விட்டார். முதலமைச்சர் சட்டென்று நின்றுவிட்டார். “நீங்கள் வரவில்லையா?” என்று முதலமைச்சரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார் இந்திராகாந்தி.

“இல்லை. நான் பின்னால் தொடர்ந்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, மெல்ல மெல்லக் காலெடுத்து வைத்து நடந்தார் எம்ஜிஆர். அதுபோல, அவர் எப்போதுமே அவ்வாறு இறங்கமாட்டார். மற்றவர்கள் பார்க்கும்போது, அவர் பரபரவென வேகத்துடன் தனக்கான தணிப்பாணியோடு கிடுகிடுவென்றுதான் நடப்பார். ஆனால், அன்று அவர் அவ்வாறு நடக்காதது எங்களுக்கெல்லாம் வியப்பாகவும் ஐயமாகவும் இருந்தது. ஏன் என்ற யோசனையோடு நாங்களும், அன்று அவர் பின்னால் போனோம்.

“என்னோடு உடன் வாருங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது” என்று சொல்லிவிட்டு, என் இரண்டு தோள்களையும் தட்டிவிட்டுச் சென்றார்.

நான் மொழிபெயர்ப்புத்துறையில் இருந்தபோது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, நூற்றுக்கணக்கான ரகசிய அறிக்கைகளைத் தமிழாகத் தருவார்கள். புரட்சித்தலைவர் எந்த அளவிற்கு, நுணுக்கமாகச் செயல்படுவார் என்பதற்கு, அது ஒரு சான்று.

புரட்சித்தலைவரின் அந்த நுணுக்கமான கவனிப்பை எண்ணி வியந்தபடியே, நானும் அவர் பின்னால் சென்றேன். தஞ்சைக் கோயிலுக்குள் நுழைந்ததும், எம்ஜிஆர் திடுமென்று கீழே தரையில் அமர்ந்து விட்டார். எல்லோரும் கோயிலுக்குள் சென்றனர்.

திடீரென அவர் அமர்ந்ததும், சுற்றிலும் நான்கைந்து பேர் சேர்ந்து வளையமாக நின்று கொண்டார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. யாரோ ஒரு மருத்துவர், அங்கு உடனடியாக வந்தார். அதுதான், அவர் நோய்வாய்ப்பட்ட முதல் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு, அவரால் பழைய எழுச்சியோடும் உணர்ச்சி யோடும் பேச முடியாமலேயே போய்விட்டது.

எனவே, எப்போதும் நான் அந்த நாளை நினைப்பதுண்டு. ஆம் அந்த நாள் என் இதயத்தில் முள் குத்திய நாள்தான்!

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *