BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் – 2 வசந்தத்தை வார்க்கும் நினைவுகள்…

எம்ஜிஆரைப்போலவே, கலைஞரும் என் மீது பரிவு காட்டியவர். ஆனால், கலைஞர் மீது எனக்கு கொள்ளைக்காதல் என்று சொல்ல வேண்டும். அவர் எப்படிப் பேசுகிறார்? எப்படி நடக்கிறார்? எப்படித் துண்டை அணிந்து கொள்கிறார் என்று அவரிடத்தில் எனக்கு வியப்பான மதிப்பு இருந்தது.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் இருந்தாலும் கூட, கலைஞரோடு இருந்த சிறுவன் என்பதுபோல, நான் இருந்தேன். இது எல்லோருக்கும் தெரியும். அண்ணாவைப் பார்க்க ஒரு முறை சென்றபோது, என்னையா பார்க்க வந்தீர்கள் என்று கேட்டார். ‘இல்ல, இந்தக் கல்லூரிப் பசங்கள்லாம் கலைஞரைத்தான் பார்க்க வந்திருப்பாங்க” என்று என்.வி.நடராஜன் சொன்னார். அதோடு, கலைஞரின் விருப்பத்தினால்தான், நான் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவும் இருக்கிறேன் என்பது, எம்ஜிஆருக்குத் தெரியும்.

அது மட்டுமில்லாமல், இன்னொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிட வேண்டும். மியூசிக் அகடமியில் ஒரு நடன அரங்கேற்றம். அதைப் பார்க்க, நான் போயிருந்தேன். அங்கு வந்திருந்த கலைஞர், என் கையைப் பிடித்து, பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். இதில் வியப்பு என்னவென்றால், அந்த நிகழ்ச்சிக்குப் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் வந்துவிட்டார். முன்வரிசையில் நான் எழுந்தால்தான், அவரை உட்காரவைக்க முடியும். என்னைப் பார்த்து விட்டுக் கையசைத்தார். வேறொரு இடத்தில் அமர்ந்து பார்த்துவிட்டு, பாதியிலேயே சென்றுவிட்டார். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு கசப்பான நிகழ்ச்சியாகத் தோன்றியது.

இந்த நிகழ்வுக்குப் பின்புதான், எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்றதும் நடைபெற்ற அலுவலர்களின் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, நான் ஆர்வத்தோடு சென்றேன். எல்லோரும் வரிசையாக நின்று, பொன்னாடையும் மாலையும் அணிவித்தார்கள். என்னுடைய முறை வந்தபோது, இரண்டுகைகளையும் குவித்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். ‘அண்ணா, நான் இங்குதான் இருக்கிறேன்’ என்றேன்.

உடனே அவர் என் காதைப்பிடித்து, “இங்குதான் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா’ என்று சொன்னார். அங்கிருந்த யாரிடமும், அவர் இவ்வாறு பேசவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பே வரவில்லை. இரண்டு, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதுகூட, அவரது வழக்கமான, பரிவான பார்வை, என்மீது விழவில்லை.

பழைய முதலமைச்சரோடு அன்பாகப் பழகினேன் என்பதை வைத்து, யாராவது கலகமான தகவல்களைச் சொல்லியிருக்கலாம் என்று நானாக நினைத்துக் கொண்டேன். மொழிபெயர்ப்புத் துறையில் இருந்த போது, அவரைப் பார்க்கச் செல்வதற்கான, அலுவல் ரீதியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஐந்தாறு மாதங்கள் கழித்து, ஒருநாள் என்னைக் கூப்பிட்டார்.

எனக்குச் சரியாக நினைவில் இல்லை. ஒரு கோப்பில் ஏதோ ஒரு தகவலைப் பற்றி எழுதியிருந்தேன். காரோட்டிதான் இந்த பழிக்குப் பொறுப்பாக இருப்பார் என்று தெரிகிறது என்ற தொடர். கார்  ஓட்டி என்று டைப் செய்திருந்ததை, நான் காரோட்டி என்று திருத்தியிருந்தேன். அது ஒரு பெரிய கோப்பு இல்லை. எப்படியோ அதை முதலமைச்சர் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் அவர் முன்னால், நின்று கொண்டிருந்தேன். “உட்காருங்கள் நடராஜன்’ என்றார். ‘இல்லண்ணா! நான் நிற்கிறேன்’ என்று சொன்னேன் நான்.

‘அதென்ன? காரோட்டி என்று ஏன் எழுதினீர்கள். கார்  ஓட்டி என்று டைப் பண்ணியதில் என்ன தவறு?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் எம்ஜிஆர், ‘ஏன் திருத்தி எழுதினீர்கள்’ என்றார். “அண்ணா, ஒருவேளை நான்தான் தவறு பண்ணியிருப்பேன். என்ன செய்வது? நான் ‘படகோட்டி’ படம் பார்த்து, பழக்கப்பட்டவன்’’ என்று சொன்னேன். அவ்வளவுதான்! எம்ஜிஆருக்கு மகிழ்ச்சி.

கார் ஓட்டி என்று பிரித்து எழுதக்கூடாது. காரோட்டி என்று ஒரு சொல்லாகத்தான் எழுதவேண்டும். நான் படகோட்டி பார்த்து பழக்கப்பட்டவன் என்று சொன்னவுடனே, “தமிழே தமிழே!” என்றவாறே, என்னை ஆரத்தழுவிக்கொண்டார். எம்ஜிஆருக்கு மகிழ்ச்சி வந்தால், அதன் எல்லைக்கே போய்விடுவார்.

‘நான் இங்குப் பதவியேற்று, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. வந்து பார்க்கும் வழக்கம் கிடையாதா? உங்க மேல, எனக்கு ரொம்ப கோபம்’ என்றார். ‘முதலமைச்சரைப் பார்த்து பேசுவது, அவ்வளவு எளிதானதா’ என்று கேட்டேன்.

“என்னை வந்து சந்திக்கலைன்னு கோபம் என்று திரும்பவும் சொன்னார். பிறகு மறுநாள் காலையில் வந்து பார்க்கச் சொன்னார். நான் போனேன். ‘ஒரு வேலையும் இல்லை. எதற்கு வரச் சொன்னேன் என்று தெரியுமா? இன்று நீ என்னோடு சாப்பிட்டு விட்டுப்போ’ என்றார். சாப்பிட்டபின்பு, நான் திரும்பிவிட்டேன். இவ்வாறு அவர் பலமுறை பரிவு காட்டிய நினைவுகள், வந்து வந்து வசந்தத்தை வார்க்கும்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது, என்னை அதற்குச் செயலாளராக நியமிப்பார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், என்னை அவர் நியமிக்கவில்லை. வேறொருவரைத் தனி அலுவலர் என்று அமர்த்தினார்கள். அந்தத் தனி அலுவலர் பல ஏற்பாடுகளைச் செய்தபோது, நான் உடன் செல்ல நேர்ந்ததுண்டு. அப்போது பல விஷயங்களைப் பற்றி, என்னுடன் வினாவுவார் எம்ஜிஆர். அதில் ஒரு நிகழ்ச்சி, இப்போது என் நினைவுக்கு வருகிறது.

இந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கான நிகழ்ச்சிநிரலை ஒழுங்கு படுத்தியபோது, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர், திறமை மிகுந்தவர். தேசியப்பற்று உள்ளவர். நான் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு, அவரிடம் சொன்னேன். ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு என்று போடக்கூடாது. ராகுகாலம் 6 மணிவரை இருக்கிறது. நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள் அல்லவா என்று சிரித்துக் கொண்டு சொன்னேன். உடனே அவர் வெடுக்கென்று, அதனைத் தவறாக நினைத்துக்கொண்டார். ‘‘முதலமைச்சருக்கு, எல்லோரையும் விட நெருக்கமானவர் என்று நினைத்துக் கொண்டிருந்தார், தலைமைச் செயலாளர்.’’ –  நான் பக்கத்தில் இருந்த நண்பரிடத்தில் சொன்ன போது, அவர் காதில் விழுந்துவிட்டது. ‘‘உங்களுக்கு எவ்வளவு நாளாக, முதலமைச்சரைத் தெரியும்’’ என்றார் அவர். ‘‘நான் மாணவனாக இருந்தபோதிலிருந்தே தெரியும். வேறொன்றுமில்லை’’ என்றேன் நான். ‘‘உங்களுக்கு எல்லாம் தெரியாது. ராகுகாலத்தில்தான், தேர்தலில் நிற்பதற்கான தாள்களைத் தந்தவர் அவர். முதலமைச்சருக்கு, இந்த நம்பிக்கைகள் கிடையாது. நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்று சொன்னார் அந்தத் தலைமைச் செயலாளர். நான் சிரித்துக்கொண்டே, ‘‘சரி’’ என்று சொன்னேன். ஏனென்றால், எனக்குத் தெரியும். சில நிகழ்ச்சிகள் நடத்துகிறபோது, இவர்கள் சிலவற்றுக்கு ஆட்பட வேண்டும் என்பது இயல்பாகத் தெரியும்.

இதில் பெரிய வியப்பு. உடனே முதலமைச்சரிடத்தில் இருந்து அழைப்பு. தலைமைச்செயலாளர் என்னையும் அழைத்துக் கொண்டு போனார். முதலமைச்சர் எம்ஜிஆர் உட்கார்ந்துகொண்டு, உலகத்தமிழ் மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரலைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வழக்கம்போல், அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆறுமணி என்று நிகழ்ச்சிநிரலில் இருந்ததைப் பார்த்துவிட்டார் எம்ஜிஆர். என்னைப் பார்த்து திரும்பி, “நீங்கள் பெரிய பகுத்தறிவுவாதியோ?” என்று கேட்டார்.

“ஆறுமணி வரை ராகுகாலம். இதைப் பார்க்கும் ஊரார் என்ன நினைப்பார்கள் இதை ஆறரை மணி என்று திருத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு, என் முதுகில் டக்கென்று கையால் தட்டினார். ‘‘தெரியாமல் போட்டுவிட்டேன் அண்ணா! நான்தான் ஆறு மணி என்று எழுதினேன்’’ என்று சொன்னேன். எதிரே இருந்த தலைமைச் செயலாளர், ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. அதைப்பார்த்து, நான்தான் சிரித்தேன். யாருக்கு, யாரைப்பற்றி, எவ்வளவு நன்றாகத் தெரிகிறது என்பதைப் பல நேரங்களில், பலர் தெரிந்துகொள்ளாமல் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இதைச் சொல்லும் போது, நான் இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். உலகத்தமிழ் மாநாடு மதுரையில் மிகப் பெருமிதமாக நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் எண்ணம் எழுந்தபோது, என்னுடைய தந்தையாருக்கு விருது தருமாறு சொன்னவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்திராகாந்தி அம்மையார்தான், அதைத் தந்தார்கள்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை…

– முனைவர் ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை

thamizhavvai@gmail.com

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *