BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 11‘‘வாழ்வு தந்த வள்ளலே..!’’

புரட்சித்தலைவரைக் காண வருபவர்கள், ராமாவரம் தோட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். அதில் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் உண்டு என்பதுதான் வியப்பு. அப்படித்தான் ஒருமுறை நானும் நண்பர் ஜெகத்ரட்சகனும் வரிசையில் காத்திருந்தோம்.

அந்த வரிசையில் அவரவர்கள் தலைவருக்கு மாலை அணிவித்து நூல்களைக் கொடுத்து பரிசுகளை வழங்க வந்திருந்தனர். நாங்களும், பொன்னாடைகளோடு அவ்வாறே நின்றிருந்தோம்.  வரிசையில் நின்றிருந்தவர்களிடையே இருந்த எங்களை, எப்படியோ புரட்சித்தலைவர் பார்த்துவிட்டார்.

பார்த்தவர், அங்கிருந்து எழுந்து விடுவிடுவென்று விரைந்து வந்து, ‘‘தமிழ் இப்படி எனக்காகக் காத்திருக்கலாமா?’’ என்று சொல்லி ஆரத்தழுவிக்கொண்டார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ‘‘தமிழ்நாடே உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எதைச்செய்தாலும் அதில் தமிழ் தழைத்தோங்கி இருக்குமே?’’  என்று சொன்னேன்.

என்னையும் ஜெகத்ரட்சகனையும் கையோடு அழைத்துக்கொண்டுபோய் அழகு பொங்கிய ஓர் அற்புதமான சரிகை மாலையை எனக்கு அணிவித்தார். அவரது அன்பணைப்பில் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்.

அப்போது என்னிடம், ‘‘நான் நாள் தவறாமல் தாங்கள் சொல்லி வருகின்ற திருவெம்பாவையைக் கேட்டு வருகிறேன்.  திருவாசகம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது.  நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை என்னோடு பயணம் செய்துகொண்டே திருவாசகத்தின் பொருளை சொல்லுங்கள் என்று சொன்னார்.”

பக்கத்தில் இருந்த ஜெகத்ரட்சகன், ‘‘சிவன்தான் திருவாசகத்தை கேட்டதாகச் சொல்வார்கள். அண்ணன்தான் எங்களுக்கு அந்த வடிவத்தில் இருக்கிறார்’’ என்றார்.

‘‘உனக்கு என்ன நீ எப்போதும் ஔவையோடே இருக்கிறாய். உனக்கு அத்தனையும் மனப்பாடம்’’ என்று பதிலுரை சொன்னார் புரட்சித்தலைவர்.

அந்நேரம், நாடோடி மன்னன் பாடல் வரி ஒன்று நினைவுக்கு வந்து என் மனவெளியில் ஒலித்தது. அது…

‘‘முன்னேற்றம் இவனது உயிராகும்

முத்தமிழ் இவன் நாவில் பயிராகும்’’

என்ற சுரதா எழுதிய வரிகள். அன்றந்த இனிமையோடு புரட்சித் தலைவரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.

காவியக் கவிஞர் வாலி….

காவியக் கவிஞர் வாலி அவர்கள் என் நெருங்கிய நண்பர்.  பொழுது போகாத வேளையில், நறுக்குச் செய்திகளையும் துணுக்கு நகைச்சுவைகளையும் நாங்கள் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்ததுண்டு.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மாமதுரையில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்த நேரம் அது…

நான் கவிஞர் வாலி அவர்களை அண்ணா என்று அழைப்பேன். அவரும் திரும்பி அண்ணா என்று அழைப்பார்.  அப்போது சொன்னேன், “கவியரங்கத்திற்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்.  அது உலகத்தமிழ் மாநாடு, உங்களை உலகத்மிழர்கள் எல்லாம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறார்கள்” என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “நான் என்ன இந்த புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் நடுவில் தலைமை தாங்குவது?  எதற்கும் ஒரு சொல் புரட்சித்தலைவரை கேட்டுக்கொண்டு நீங்கள் முடிவு செய்யலாம்” என்றார்.

அன்று மாலையே, புரட்சித்தலைவரிடம் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை நான் சொல்லிக்கொண்டு வந்தபோது, கவியரங்கத்தின் பெயரைப் படித்து, கவியரங்கத் தலைவர் கவிஞர் வாலி என்று படித்தேன்.

அவர் என்னைப் பார்த்து, “என் நண்பர் வாலி உங்களுக்கும் நண்பர் என்று எனக்குத் தெரியும். அது சரி.  யாரைக்கேட்டு அவர் பெயரைப் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

“எனக்குப் பழகிய பொன்மனத்தைக் கேட்டுப் போட்டேன்” என்றேன். உடனே, என்னை முதுகில் தட்டி, “வாலி வாய் திறந்தால் திரைப்படப் பாடல்களை வெள்ளம்போல் கொட்டுகிறவர்.  இசைப்பாடல்களை எழுதுவது அவருக்கு கை வந்த கலை.  இலக்கிய அரங்கத்திற்கு அவர் எப்படி பொருத்தமாவார்“ என்று கேட்டார்.

அதற்கு நான், “இல்லை அண்ணா, நான் அவரிடத்திலும் கேட்டுக்கொண்டேன்… அவர் பொருந்துவார்” என்று சொன்னேன்.  உலகத் தமிழ் மாநாட்டில் கவியரங்கம் தொடங்கியது.  புரட்சித்தலைவர், முதல் வரிசையில் கை கட்டியபடி ஒரு மாமன்னன் போல அமர்ந்திருந்தார்.

கவியரங்கத்தின் தலைமையுரையைத் தொடங்கினார் கவிஞர் வாலி.  புரட்சித் தலைவவரைப் பற்றி தொடங்கிய வரிகள், அவர் நடித்த படங்கள், அவர் புனைந்த கோலங்கள், அவர் பேசிய தொடர்கள் இவைகளையெல்லாம் பின்னிப் பிணைந்து மின்னல்போல அவருடைய கவிதைத் துள்ளல் அரங்கத்தில் பாய்ந்தது.

அரங்கமே ஒவ்வொரு தொடருக்கும் எழுந்து கைத்தட்டி ஆர்ப்பரித்தது. உற்சாக அலையால் அரங்கம் அதிர்ந்தது. புரட்சித்தலைவர், இரண்டொருமுறை தன் கண்ணாடியைக் கழற்றி கை குட்டையால் துடைத்துக் கொண்டார்.  கவியரங்கத்தில், பெரிய கவிஞர்கள் அத்தனைப்பேரும் பாடி முடித்தார்கள்.

 

எந்தப் பாடலும் கவிஞர் வாலி பெற்ற கைத் தட்டலைப் பெறவில்லை.  கவியரங்கம் முடிந்ததும், நான், “புரட்சித்தலைவர் இப்போது கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவிப்பார்” என்று அறிவித்தேன்.

புரட்சித்தலைவர், அனைத்து கவிஞர்களுக்கும் பொன்னாடை அணிவித்துவிட்டு, நிறைவாகக் கவிஞர் வாலியின் முன் நின்று பொன்னாடையைக் காண்பித்து, “இது உங்களுக்குப் போதுமா? இது பொனனால் செய்தது இல்லையே?” என்று சிரித்துக் கொண்டே நெருக்கமான தழுவலோடு பொன்னாடை அணிவித்தார்.

வாலியும் ‘‘வாழ்வு தந்த வள்ளலே’’ என்று கூறி மீண்டும் ஒருமுறை தழுவினார். நிகழ்வின் நிறைவில் என்னைப் பார்த்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொன்னார்.  “இந்த கவியரங்கத்தில் காவியக் கவிஞர் வாலி தலைமை தாங்கியது, யாருக்குப் பெருமை?  ஒளவைக்கா? அரங்கத்திற்கா? எனக்கா?” என்ற கேட்டு, என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அன்று முதல், எந்த மாநாட்டு அரங்கிலும் எந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கவியரசர் வாலிதான் தலைமை தாங்கலானார்.

எனக்கு இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.  தன் வாழ்நாளில் இறுதி மூச்சுவரையில் எந்த அரங்கத்தில் பாடினாலும் என்னை கவியரங்கத்திற்கு தலைமை தாங்கச் செய்த பெருமை ஔவை அண்ணாவைத்தான் சாரும் என்று சொல்வார்.

நன்றி உணர்ச்சிக்கு வாலியின் வாழ்வு ஒரு பெரிய சான்றாகும்.

 

கவிஞர் வாலி மனத்தில் பட்டதை மறக்காமல் சொல்லக்கூடியவர்.

ஒருமுறை அவருடைய முகத்தில் விபூதியும் குங்குமக்கோட்டையும் பார்த்து,  ‘‘நீங்கள் இதைத் துடைத்துக்கொண்டால் என்ன என்று புரட்சித் தலைவர் கேட்டாராம். கட்சியில் இருப்பவர்கள், கட்சியுணர்வோடு உள்ளவர்களை உங்கள் படத்திற்கு பாடல்களை எழுத வைக்காமல் பக்திமான்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்களே என்று என்னை கேட்கிறார்கள்’’ என்று சொன்னாராம்.

அதற்கென்ன சரி அண்ணா என்று சொல்லிவிட்டு, மறுநாளில் இருந்து அந்த விபூதி குங்குமத்தை இன்னும் பளிச்சிடுமாறு இட்டுக்கொண்டார் வாலி. புரட்சித்தலைவரும் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை.

புரட்சித்தலைவருக்கு, தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு எழுதிய

‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்

அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

கடமை அது கடமை

கடமை அது கடமை…’’

என்ற பாடல் அவரையும் அவரது இயக்கத்தையும் நினைத்து எழுதியவை அல்ல என்றார். ஆனால், காலத்தில் விளைந்த கனியாகவும், கட்சி சூழலுக்கு உகந்த வைரங்களாகவும் அந்த பாடல் அமைந்தது என்பதை பெருமிதமாகச் சொன்னார்.

இதேபோல், எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற,

‘‘நான் ஆணையிட்டால் …

அது நடந்து விட்டால் …

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்…’’

என்ற பாடலும் காலத்தில் விளைந்த கனியாகவும், கட்சி சூழலுக்கு உகந்த வைரமாகவும் அந்தப் பாடல் அமைந்துவிட்டது. நான் ஆணையிட்டால் என்ற பாடல், ஒரு செல்வச் சீமானின் செருக்கை அடக்குவதற்காக ஒரு தம்பி எழுச்சி பெறுகிற பகுதி அது.

ஆனால், முதலமைச்சராகி அவர் ஆணையிட்டால், எவை நிகழும் என்பதை எதிர்காலத்தை உணர்ந்துகொண்டது போல அந்தப் பாடல் அமைந்தது.

அது கவிஞர் வாலியின் திறமையா? அல்லது அந்தப் பாடலை நடித்தவருடைய செல்வாக்கா? என்று இன்றளவும் எடை போட முடியாத நிலையில் இருக்கின்றன.

எங்கள் நட்பு, நன்றியுணர்ச்சியோடும் விருந்தோம்பலிலும் வாடாமல் மலர்ந்தன. கவியரசர் வாலி, கலையுலக நண்பர்களோடு மட்டுமல்லாமல், 60-65 வயதுக்குப் பின்னர்தான், தமிழுலக நண்பர்களைப் பெற்றிருக்க வைத்தது.

எவர் மீதும், எரிச்சல் காட்டாத, பெரிய மனத்தோடு எல்லோரையும் வாழ்த்தி வரவேற்கிற ஒரு தந்தையின் மனப்போக்கைப் பிறகு வளர்த்துக்கொண்டார்.

வாலியிடம் ஒருமுறை, புரட்சித்தலைவர், ‘‘நமக்குப் பிள்ளைகள் பிறப்பதில்லை, பிறந்தாலும் அவர்கள் நமது வெற்றியைப் பெறுவதில்லை. ஏன்?’’ என்று கேட்டாராம்.

‘‘பிள்ளையை வளர்க்கும் கலை, ஒரு தாயின் தனித்திறமையில் இருக்கிறது. அங்குமிங்குமாக அலைகிற கலைஞர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பிள்ளைகள் அப்படித் தாயை மீறி வந்து தந்தையின் வழியில் வந்து தடுமாறித் தடம் மாறுகிறார்கள்’’ என்று நான் என்னைப் பற்றி சொன்னேன். அதற்குப் புரட்சித்தலைவர், எனக்கு 20 உதாரணங்களைச் சுட்டிக்காட்டிச் சரி என்றார்.

புரட்சித்தலைவர், இப்படி மனம்திறந்து பேசுகிற வாய்ப்புகள் எனக்குப் பலமுறை நேர்ந்தன என்றார் வாலி.

திருவிடைமருதூரில் திருவாசக விழாவில், கோயில் வாயிற்படி வரை வந்து, உள்ளே வராமல், எம்.ஜி.ஆர் திண்ணையில் அமர்ந்திருந்ததும் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஏன் உள்ளே வரவில்லை என்று கேட்டபோது, ஓ! அதுதான் அவரது இயக்கமா? அதுதான் அவரது கழகமா? என்று கேட்டதாக நான் சொன்னதைக் கேட்டு, வாலி இவ்வாறு தொடர்ந்து பேசினார்.

“தளர்ச்சி வருகிறபோது, சுற்றியிருக்கிறவர்கள் எப்படியாவது கவிழ்த்துவிடுகிறார்கள். அது, மறைவாகப் பக்தி வலைக்குள் வீழ்த்திவிடும் போலத் தெரிகிறது. எனக்கும் அவருக்கும் அப்படித்தான்” என்றார் வாலி.

 

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்

, தொடர்புக்கு: thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *