BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 1 ‘‘என் கனவு நிறைவேறியுள்ளது..!’’

 

ஆயிரத்தில் ஒருவன் என்று இந்த நாடு புகழ்கின்ற கோடி கொடுத்த கோமான் என்றும் கொடை வள்ளல் என்றும் ஒப்பற்ற தமிழகத்தின் புரட்சித்தலைவர் என்றும் பெருமைக்குரிய முதலமைச்சர் என்றும் நாடு போற்றுகின்ற எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை உலகமெல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

புரட்சித்தலைவர் அவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு மாமனிதர் ஆவார். அவருக்கு பல்கலைக்கழகத்திலே ஒரு முறை பட்டமளித்தபோது வரவேற்புரை நிகழ்த்துகிற வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது.  அப்போதே நான் சொன்னேன்,  ‘மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்’ என்று சொன்னபோது, புரட்சித்தலைவர் புன்னகையோடு அந்த பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

புரட்சித்தலைவர் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு குறை இருந்தது என்றால், நான் கல்வி கற்க முடியவில்லை.என்னுடைய வாழ்க்கையை  நான் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ நிகழ்த்த முடியாமல் போய்விட்டது.  இப்போது என்னுடைய ஆட்சியில், காணும் இடமெல்லாம், பள்ளிகளும், கலைக்கல்லூரிகளும் நிறைந்திருப்பதை காணும்போது என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது என்று சொன்னார்கள்.  திரைப்படங்களெல்லாம், வேடிக்கை படங்கள், நையாண்டி படங்கள், கேளிக்கை படங்கள் என்று நாட்டு மக்கள் நினைத்தபோது, திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு நல்லறிவையும், பெண்களுக்கு உயர்வையும் கல்வியறிவையும் வீரத்தின் மாட்சியையும் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்திய பெருமை புரட்சித்தலைவர் அவர்களைச் சாரும்.

சென்னைக்கு வந்து ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, அரசுத்துறையில் நான் பணியாற்றத் தொடங்கினேன். அது 1977 என்று எண்ணுகிறேன். மொழிபெயர்ப்புத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, புரட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, அலுவலர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து வணங்குகிற ஒரு வழக்கம் இருந்தது.

அந்த வகையில், நானும் ஆர்வத்தோடு போனேன். அந்த ஆர்வத்திற்கு ஒரு காரணம் இருந்தது. ஏனென்றால், பச்சையப்பன் கல்லூரியில் ஆனர்ஸ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே புரட்சித்தலைவரை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரியில் மாணவர் தலைவனாக இருந்தபோது மன்ற விழாக்களில் கலந்து கொள்ளச் செய்வதற்காக, எம்ஜிஆர் அவர்களைச் சந்திக்கப் போவோம். அவரும் எங்களோடு அமர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பேசுவார்.

அந்தச் சமயத்தில் என்னுடன் படித்த நண்பர் ஒருவருக்கு, கல்லூரிச் சம்பளம் கட்ட முடியாமல் போய் விட்டது. “அண்ணா நீங்கள்தான் உதவ வேண்டும்” என்று என்னிடம் வேண்டினார். உடனே, நான் எம்ஜிஆருக்குக் கடிதம் எழுதினேன். ஐந்து நாட்களுக்குள் எம்ஜிஆர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து, அந்த நண்பரின் கல்லூரி மற்றும் விடுதிச் சம்பளத்தைக் கட்டிவிட்டு, அந்த ரசீதுகளை வாங்கிப் போனார். அப்போது அந்த நபர் என்னைச் சந்தித்து, “நீங்கள்தானே ஔவை நடராஜன்’ என்று கேட்டார். ஆமாம் என்றேன்.  “நீங்கள் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்புதான், அண்ணன் இந்த உதவியைச் செய்தார். உங்களை ரொம்பவும் விசாரித்ததாகச் சொன்னார்’ என்றபோது, நான் நெகிழ்ந்து போனேன்.

அது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும், தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் ஒரு தொடக்க நிலை உரையாளராக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அப்போது மாணவர்கள் மத்தியில், எனக்குச் செல்வாக்கு இருந்தது. திடீரென்று தஞ்சை நகரில், எம்.ஜி.ஆர். ஒரு நாடகம் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு. அவரைக் கல்லூரிக்கு அழைத்துவந்து, பேசவைக்கலாம் என்று நான் மாணவர்களிடத்தில் சொன்னேன். மாணவர்களுக்கும், எம்.ஜி.ஆர். மீது மாபெரும் காதல், ஐயோ! நம் ஆசிரியர் இங்கே எம்.ஜி.ஆரை அழைத்து வரப்போகிறார் என்ற பெருமிதம்

அப்போது கல்லூரி முதல்வர் என்னைப் பார்த்து, “எம்.ஜி.ஆரை அழைத்து வர, உங்களால் முடியுமா?’ என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். சரபோஜி மன்னர் கல்லூரிக்கு எம்ஜிஆர் வரப் போகிறார் என்பதை அறிந்ததும், தஞ்சையே கலகலத்துப் போயிருந்தது. எம்ஜிஆரைச் சந்தித்து, அவரைக் கல்லூரிக்கு அழைப்பதற்காக, நான் சென்றேன். அந்தச் சமயத்தில் எம்ஜிஆருடன் பணியாற்றிக் கொண்டு, திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார் கவிஞர் முத்துக்கூத்தன்.

நான் மாணவனாக இருந்த போதே, அவரோடு பழகியதுண்டு. ஏனென்றால், நானும் கவிஞர் சுரதாவும் சிலநேரங்களில் படப்பிடிப்புகளுக்குப் போவோம். அப்போது புரட்சித் தலைவரின் படப்பிடிப்புத் தளங்களுக்கும் சென்றிருக்கிறோம். கவிஞர் முத்துக்கூத்தனை, அந்தச் சமயங்களில் நான் சந்தித்திருக்கிறேன். என்மீது, மிகுந்த அன்பு காட்டுவார். அந்த நட்பினால், எம்ஜிஆரைப் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது. என்னைப் பார்த்தவுடன் கட்டியணைத்துக் கொண்டார். “எப்படியிருக்கிறாய்? பேசாமல் என்னோடு வந்து சேர்ந்து விடு’ என்றார். எப்போதுமே தன்னைச் சந்திப்பவர்களிடத்தில், அவர் தனியன்பு காட்டுவார். நம்மிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்று இவ்வளவு அன்பு காட்டுகிறார் என்று நமக்கு எண்ணத் தோன்றும். ஆனால், எல்லோரிடத்திலும் அவ்வாறுதான் பழகுவார் எம்ஜிஆர். விதம் விதமான உணவுகளைக் கொண்டுவந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று உபசரித்தார். இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம். என்னுடன் இரண்டு ஆசிரியர்களையும் அழைத்துப் போயிருந்தேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப்பெரிய மதிப்பு ஏற்படும்படி, எம்ஜிஆர் நடந்துகொண்டார். இது ஒரு சிறப்பான குணம் அல்லவா!  சிலநேரங்களில் நம்முடைய மதிப்பு முழுவதையும், இன்னொருவருக்கு எதிரில் காட்டத் தவறி விடுவார்கள் பலர். ஆனால், அந்த வகையில், எம்ஜிஆர் முற்றிலும் மாறுபட்ட மாமனிதர்.

கல்லூரிக்கு வரச் சம்மதம் தெரிவித்தார் எம்ஜிஆர், நாங்களும், மகிழ்ச்சியோடு திரும்பினோம். காலை பத்தரை மணியளவில், கல்லூரிக்கு வந்தார் எம்ஜிஆர். தஞ்சையே, அங்கு திரண்டிருந்தது. கூட்டத்தினரைப் பார்த்து, ‘நான் அரைமணிநேரம்தான் பேசுவேன்’ என்றார் புரட்சித்தலைவர். அவர் பேசத்தொடங்கி, அரைமணிநேரம் ஆனபின்பு, அவர் கையில் இருந்த கைக்கடிகாரத்தில் அலாரம் அடித்தது. அதுவே எங்களுக்கு, மிகப்பெரிய வியப்பு. காரணம், கைக்கடிகாரத்தின் அலாரம் அடிக்கும் ஒசையை, நாங்கள் அதுவரை கேட்டதேயில்லை. அதற்காகவே, தனியாகக் கைதட்டினார்கள். இதைப் பார்த்ததும், எம்ஜிஆர் சிரித்துக் கொண்டார். நண்பகல் ஒரு மணிவரை, அந்தக் கூட்டத்தில் பேசினார். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் எம்ஜிஆர். மாணவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தந்தார். கல்லூரி முதல்வர் அருகில் இருக்கும் போதே, ‘நடராஜன் என்னோடு வந்துவிடுங்கள்’ என்று அவருடைய காரிலேயே அழைத்துக் கொண்டு போனார்.  அது என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி!

அன்றிரவு ஒன்பது மணிக்கு, தஞ்சையில் பேசினார். பத்து மணிக்கு, விருந்து நிகழ்ச்சி நடந்தது, பெரும் கூட்டம் அங்கு திரண்டிருந்தது. அவரைக் காண்பதற்காக, பெரும் நெரிசல் ஏற்பட்டது. அவருடன் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளை, என்னால் என்றுமே மறப்பதற்கில்லை.

நான் கதை, கவிதைகளில் ஆர்வம் கொண்டவன் என்று எம்.ஜி.ஆர். நினைத்துக் கொண்டார். என்னுடைய கதைப் பிரிவுக்கு எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்றுகூடச் சொன்னார். நான் சிரித்துக்கொண்டேன்.

மாணவர் பேரவை மட்டுமில்லாமல், உலகத்தமிழ்ப் பேரவையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். மேலவை கொறடாவாகப் பிற்காலத்தில் பணியாற்றிய இரா. ஜனார்த்தனமும், நானும் அடிக்கடி சத்யா ஸ்டுடியோவுக்குப் போவோம். அவர் என் நெருங்கிய நண்பர். இது எம்ஜிஆருக்கு, நன்றாகத் தெரியும். அதன்பின், செய்தித்துறை மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் நான் பணியாற்றத் தொடங்கியதும், எம்ஜிஆருக்குத் தெரியும்.

 

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை….

 

– ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை

thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *