தற்போதைய செய்திகள்

மனிதநேயம் கொண்டவர்களாய் வாழ வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து….

சென்னை,

இயேசுபிரான் போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், மனிதநேயம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்று தனது ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருணை உள்ளம்

இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட “ஈஸ்டர் திருநாள்” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அன்பின் திருவுருவமான இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.
பகைவர்களையும் மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவரும், “தன்னைப் போலவே பிறரையும் நேசி” என்று அன்பின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றியவருமான இயேசுபிரான், கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை, ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

தியாக உணர்வு

இந்நாளில், கிறிஸ்துவர்கள் இயேசுபிரானின் அருளுரைகளை மனதில் நிறுத்தி, தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுவார்கள். இந்த நன்னாளில், உலகில் அன்பும், சமாதானமும் தழைத்தோங்கிட, இயேசுபிரான் போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், மனிதநேயம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply