தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து-அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்….

சென்னை,

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது குறித்து, அ.தி.மு.க. தலைமையிடம் தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

சிறப்பு நிதித் தொகுப்பு அளிக்காதது, சிறப்பு அந்தஸ்து அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஆந்திர அரசின் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மாநில உரிமைகளை காப்பாற்றுவோம்

விவசாயிகள், நெசவாளர்கள், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், பழங்குடியினர், சீர்மரபினர் என அனைத்து தரப்பட்ட மக்களையும் கைதூக்கிவிடும் வகையில், தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூபாய் 77,000 கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நீதி பேணப்படுகிறது. மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது. எங்களுக்கென கொள்கைகளும் லட்சியங்களும் உள்ளன. அதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். மாநில உரிமைகளைக் காப்போம்.

தலைமை முடிவு செய்யும்

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது குறித்து, கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டரீதியாகவும், அதிகளவில் போராட்டங்களையும் முன்னெடுத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம். அதனை அமைக்காமல் ஓயப்போவதில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க போராடுவோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
வைகை செல்வன்
அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காகவே, சட்டசபையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஜெயலலிதா 30 வருடங்கள் தொடர்ச்சியாக போராடி, நதிநீர் உரிமையை நிலைநாட்டியவர். அவரது அரசு அதே கொள்கையுடன் போராடி வருகிறது. நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
முதல்வர், துணை முதல்வர் முடிவு
இதுபோன்ற தொடர் அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுப்பதால், விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்ககை எடுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவெடுப்பார்கள். அ.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு இதுதொடர்பாக கூடி முடிவு எடுக்கும்.
இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.
Leave a Reply